வெள்ளி, 24 ஜூலை, 2015

தமிழ்ப்பெயர் சூட்டாஅமைச்சர் கோகுல இநதிராவிற்குத் தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம்.




தமிழ்ப்பெயர் சூட்டாஅமைச்சர் 
கோகுல இநதிராவிற்குத் 
தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம்.

கைத்தறி - துணிநூல் துறை அமைச்சர் மாண்புமிகு கோகுல இந்திரா நேற்று  மூவண்ணப் புதிய சேலை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அப்பொழுது அந்தச் சேலைக்கு செய த்ரியம்பிகா எனப் பெயர் சூட்டியுள்ளார். இதன்  மூலம் தமிழக அரசிற்குக் களங்கம் ஏற்படுத்தி உள்ளார்.
 தமிழ் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துணி நெசவில் சிறப்புற்று இருந்தனர். பாலாடை போன்ற மெல்லிய ஆடை  நெய்வதிலும்  பூ வேலைப்பாடு மிக்க ஆடை நெய்வதிலும் வல்லமை பெற்றிருந்தனர். உரோம் முதலான வெளிநாடுகளில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இது குறித்துப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்,
"நம் நாட்டுப் பாலாவியன்ன மெல்லிய ஆடைகளுக்கு மேல் நாட்டினர் தவங்கிடந்தனராம். உரோமபுரிப் பெண்கள் நம் நாட்டு ஆடைகட்காகப் பெரும் பொருள் செலவிட்டனராம். உரோம் நாட்டுச் செல்வம், தமிழ் நாட்டு முத்துக்கள், மெல்லிய ஆடைகள் நறுமணப் பொருட்கள், எண்ணெய்கள் முதலியவற்றிற்காகப் பாழாகி, நாடு வறுமையடைகின்றதேஎன்று அன்று உரோம் நாட்டுச் சட்ட மன்றில் முறையிட்டு ஓலமிட்டனராம்." 
என்று குறிப்பிட்டுள்ளார்(மாமூலனார் பாடல்கள் 12, அகரமுதல நாள் மார்ச்சு 23,2014). 
 நெசவுத்துறையில் வல்லமை மிக்க தமிழர்கள் நெய்யும் சேலைக்குத் தமிழில் பெயர் சூட்டாமல் ஆரியச்சொல்லில் பெயர் சூட்டித் தமிழர்களைத் தலை குனிய வைத்துள்ளார் அமைச்சர்; தமிழர் நாகரிகச் சிறப்பையும் மறைக்கின்றார். மாண்புமிகு முதல்வர் அவர்கள்,    அறிவியலிலும் தமிழ்! அனைத்திலும் தமிழ்!   என்பதைக் கொள்கை முழக்கமாகக் கொண்டுள்ளார். பெயர் சூட்டலிலும் தமிழைப் புறக்கணிப்பதன் மூலம் அவரின் கொள்கை போலியானது என நாடு எண்ணும் வண்ணம் அவருக்கும் இழுக்கு தேடியுள்ளார். பூப்பெயர்களையோ  முப்பெருந்தேவி, மூவண்ணஅரசி  போன்று பிற தமிழ்ப்பெயர்களையோ மூவண்ணச்சேலைக்குச்  சூட்டலாமே!   முதல்வரின் பெயரைப்போல் சூட்டக் கருதினால் வெற்றிச்செல்வி, வாகையரசி போன்ற பெயர்களைச் சூட்டலாமே! எளிமையாகத் தமிழ்ப்பெயர் இருந்தால்தானே மக்களைக் கவர்ந்து விற்பனை பெருகும். இதை யெல்லாம் கருதிப் பார்க்காமல், தமிழ்நாட்டில் தமிழர்களால் தமிழர்களுக்காக நெய்யப்பட்ட சேலைக்குப் பிற மொழிப்பெயர் சூட்டிய அமைச்சர் கோகுல இந்திராவைத் தமிழ்க்காப்புக்கழகம் கண்டிக்கின்றது.

  தன் தவற்றைத் திருத்திக் கொண்டு உடனே  நல்ல தமிழ்ப்பெயர் சூட்டுமாறும்  வேண்டுகோள் விடுக்கின்றது.
 அவ்வாறு தமிழ்ப்பெயர் சூட்டாவிட்டால் இப்புதிய மூவண்ணச் சேலையைப்புறக்கணிக்குமாறு பொதுமக்களுக்கும் தமிழ்க்காப்புக் கழகம்  அன்பு வேண்டுகோள் விடுக்கின்றது.
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்,
 தலைவர், தமிழ்க்காப்புக்கழகம், சென்னை 91.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக