ஞாயிறு, 5 ஜூலை, 2015

கோஅனா பள்ளியில் தமிழ்க்கல்வி தேவை!

கோஅனா பள்ளியில் தமிழ்க்கல்வி தேவை!

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.
சப்பான் தமிழ்ச்சங்கத்தின் மொழிவளர்ச்சித் துறையின் சார்பாகச் சப்பான் நாட்டின் கவாசாகி நகரில் இயங்கிவரும் கோஅனா பள்ளிக்குச் (Kohana international school) சென்றிருந்தோம்.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் பள்ளியின் முதல்வருமான திருமதி.பிரியா அவர்கள் நம்மை அன்புடன் வரவேற்றார். கோஅனா பள்ளி பன்னாட்டுப் பொதுச் சான்றிதழ்க் கல்விக்கான  (IGCS என்னும்) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளியாகும். இந்தப்பள்ளியில் நம்முடைய தமிழ்ப்பிள்ளைகளும் மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து ஒன்றாகக் கல்வி கற்கிறார்கள் மேலும் கவாசாகி நகரிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு நம்முடைய தமிழ்ச்சொந்தங்கள் வாழ்ந்து வருகிறார்கள் எனவே இனிவரும் வருடங்களில் இப்பள்ளியில் சேரவிருக்கும் மாணவச்செல்வங்களுக்கும் தற்பொழுது பயின்று வரும் மாணவச்செல்வங்களுக்கும் அன்னைத்தமிழின் அண்மையும் அரவணைப்பும் கிடைக்கவேண்டி இந்தப்பள்ளியின் நூல்நிலையத்திற்கு நமது உலகப்பொதுமறையாம் திருக்குறள் முதலான தமிழ் நூல்களை அன்பளிப்பாக வழங்கினோம்.
மேலும், நம்முடைய தமிழ்ச்செல்வங்கள் அன்னைத் தமிழைக்கற்று மொழியுணர்வுடனும் தாய்மொழிப்பற்றுடனும் சிறந்து விளங்கிட நாம் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளை அவர்களுக்கு எடுத்துரைத்தோம். கவாசாகி பகுதியில் நாம் மாணவர்களுக்காக நடத்தவிருக்கும் முத்தமிழ் விழாவினைப்பற்றியும் தெரிவித்து இவ்விழாவினைக் கோஅனாபள்ளியில் நடத்திடவும் இசைவு கேட்டோம்.
  இதனைக் கேட்டவுடன் சற்றும் தயங்காமல் அகமகிழ்வுடன் நமக்கு முத்தமிழ் விழாவினைத் தங்கள் பள்ளியில் நடத்திக்கொள்ள இசைவுஅளித்துள்ளார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தமிழ்மொழியை ஒரு பாடமாகக் கொண்டுவந்தால் இங்குக் கல்வி கற்கும் நமது தமிழ்ச்செல்வங்கள் மட்டுமின்றி தமிழைக்கற்க விரும்பும் பிற மொழிக்குழந்தைகளும் தமிழ்கற்க ஏதுவாக இருக்கும் என்ற கோரிக்கையை வைத்திருக்கின்றோம்.
நமது கோரிக்கையை ஏற்ற இப்பள்ளி நிருவாகம், நம்முடைய சொந்தங்கள் தமிழ்மொழியை ஒரு பாடமாகக் கற்க விருப்பம் தெரிவித்தால் கட்டாயம் கொண்டுவருவதாகவும் அத்தகையச் சூழ்நிலையில் தமிழ்ஆசிரியர் தேர்வின்பொழுது நம்முடைய சப்பான் தமிழ்ச்சங்கம் உதவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்கள். நாமும் இப்பள்ளியில் தமிழைக் கொண்டுவர நம்மாலான எல்லா உதவிகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளோம்.
  தமிழன்னை ஆட்சி செலுத்திட தோக்கியோ மற்றும் (இ)யோக்கோஅமா நகர்களுக்கு அடுத்து கவசாகியிலும் ஓர் அடித்தளத்தை ஏற்படுத்திய மகிழ்ச்சியுடன் இப்பள்ளியின் நிருவாகத்துக்கு நம்முடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றோம்.
தாய்மொழி காக்க, தமிழ்மொழியை அடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு செல்ல தமிழர் அனைவரும் மென்மேலும் தங்கள் ஆதரவினை நல்கிடவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவிடவே வகைசெய்வோம்!
இங்ஙனம்,
சப்பான் தமிழ்ச்சங்கம்,
மொழிவளர்ச்சித்துறை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக