90giantwheel
   அன்றாடம் அதிகாலையில் எழுந்து இரவு வரை ஆங்கில வழிக்கல்வி, பள்ளியில் படிப்புச்சுமை அதன் பின்னர் சிறப்பு வகுப்பு; பெற்றோரின் தூண்டுதலால் தற்காப்புக்கலை(கராத்தே), ஒத்தியம்(ஆர்மோனியம்), நாட்டியம், பரதம், காணொளி ஆட்டங்கள் எனக் கசக்கிப்பிழியப்படல்: வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை விட்டால் கூடச் சிறப்புப் பயிற்சி வகுப்பு என மாணவ, மாணவியர்களுக்கு அடுக்கடுக்கான வேலைகள். இதற்கிடையில் என்றாவது ஒரு நாள் விடுமுறை விட்டால் கூடப் பண்டைய காலத்தில் விளையாடிய கோலிக்குண்டு, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கிட்டிப்புள், மணல் விளையாட்டு, சடுகுடு, நீச்சல் போன்ற எந்த விளையாட்டுகளையும் இக்காலக் குழந்தைகள் விளையாட வாய்ப்பும் இல்லை; விளையாடத் தோழர்களும் இல்லை. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை என்றாவது ஒரு நாள் திரைப்படம், பூங்கா, புத்தகக் கண்காட்சி போன்றவற்றிற்கு அழைத்துச்செல்வார்கள். தற்பொழுது அவற்றிற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. வணிக நோக்கத்துடன் தற்பொழுது, கேளிக்கைப் பூங்காக்களுக்கு அழைத்துச்சென்று காசு கொடுத்து கருமாந்தரத்தை விலைக்கு வாங்குகின்றனர். கடந்த கோடை விடுமுறைக் காலத்தில் மட்டும் சுமார் 60 இலட்சம் மக்கள் இம்மாதிரியான பொழுது போக்குப் பூங்காவிற்குச் சென்று வந்ததாகப் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.
  கேளிக்கைப் பூங்காக்கள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த இடமாகத் திகழ்கின்றன. பூத(இராட்சத)இராட்டினங்கள் ஒவ்வொன்றும் மலைக்க வைக்கும் விதமாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த இராட்டினங்களில் ஏறும்போது நம் இதயத்துடிப்பின் வேகம் பல மடங்கு ஏறுகிறது. ஆனால் சில நேரங்களில் இன்பச்சுற்றுலா துன்பச்சுற்றுலாவாக மாறும் அவலமும் அரங்கேறி வருகிறது. கேளிக்கைப் பூங்கா அமைப்பதற்கு பி.ஐ.எசு என்ற அமைப்பானது இப்படித்தான் இயங்கவேண்டும் என ஒரு பாதுகாப்புச்சட்டத்தினை கடந்த 2004 ஆம் ஆண்டு வகுத்தது. அதில் சில நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் வகுத்தது. ஆனால் இதனை யாரும் பின்பற்றியதாகத் தெரியவில்லை. அழைத்துச்செல்லும் பெற்றோர்களுக்கும் இதன் தொடர்பாக விழிப்புணர்வும் இல்லை. இதனால் தன் பெற்ற மகனையோ பெற்ற மகளையோ கண்முன் இயந்திரத்திற்குக் காவு கொடுத்துவிட்டு மனநிலை பாதிப்படைந்த பெற்றோர்கள் நடைப்பிணமாக அலைந்து வருகிறார்கள் என்பதே உண்மை.
  கடந்த வருடம் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில்  கேளிக்கைப் பூங்காவில் தன்னுடைய பெற்றோர் முன்னே 5 அகவை குழந்தை இயந்திரத்தில் சிக்கி உயிர் இழந்தது.
  இதே போன்று தேனிமாவட்டத்தில் உள்ள வீரபாண்டியில் அருள்மிகு கௌமாரியம்மன்கோயில் திருவிழாவில் இராட்டினம் சரிந்து ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நான்கு பேர் பலியானார்கள்.
  சென்னை பூந்தமல்லியில் உள்ள அரசிநிலம்/குயின்சுலேண்டு என்ற பூங்காவில் 16 அகவை சிறுமி   பூத(இராட்சத)க் கப்பல் கழன்று விழுந்து உயிர் நீத்தார்.
  ஏப்பிரல் 2007 ஆம் ஆண்டு எம். (ஞ்)சி.எம். பூங்காவில் அங்கு வேலை செய்யும் தொழிலாளி இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
  மே 2006 ஆம் ஆண்டு தாம்பரம் அருகில் உள்ள கிக்கிந்தா பூங்காவில் 6 அகவை சிறுமி உயிரிழந்தார்.
  இதே போன்று ஏராளமான உயிரிழப்புகள் நடந்துள்ளன. எனவே  கேளிக்கைப் பூங்கா என்ற பெயரில் விலை கொடுத்து உயிரை மாய்த்து கொள்ள இடம் கொடுக்கவேண்டாம். அதே வேளையில் பொழுது போக்குப் பூங்காக்கள் போதுமான கட்டமைப்பு, உள்கட்டமைப்பு வசதிகளுடன் இருக்க வேண்டும். அரசின் உள்ளுர் அதிகாரிகள் அவ்வப்பொழுது தரச்சோதனை நடத்தவேண்டும். இல்லையெனில் வருங்கால இந்தியாவை வளப்படுத்தும் சின்னஞ்சிறார்களை பலிகொடுக்கப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. சிற்றூரில் கூறப்படும் பழமொழியான “காசைக் கொடுத்து கருமாந்தரத்தை விலைக்கு வாங்காதே” என்ற கூற்று கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
90.pozhuthu01 90.pozhuthu02 90.pozhuthu03
90vaiagaianeesu_name