புதன், 23 செப்டம்பர், 2015

“களவு போகும் நம் மண்ணும் மனிதமும் ” – சூழலியல் கருத்தரங்கம்


புரட்டாசி 10, 2046/ செப்.27, 2015  மாலை 5.30

மேற்குத் தாம்பரம்

azhai_kavupoakummannummanithamum
“களவு போகும் நம் மண்ணும் மனிதமும் ” – சூழலியல் கருத்தரங்கம்
  இன்று தொடர்ச்சியாகச் சுரண்டப்பட்டு வரும் இயற்கை வளங்கள் குறித்து நாம் அறிந்தும் கவனம் செலுத்தாமலே இருக்கின்றோம். நாம், நமது அருகில் அன்றாடம் மணல் கொள்ளையால் சுரண்டப்பட்டும், வன்கவர்வுகளால்,   கொட்டப்படும் கழிவுகளால் மாசுபட்டும் வருகின்ற நீர் நிலைகளைப்பற்றிக் கவனத்தில் கொள்ள மறுக்கின்றோம். பணம் இருந்தால்தான் தண்ணீர்!, அதுவும் தூய்மையான நீரைப் பெற இயலாத நிலை! தொடர்ச்சியாகக் குறைந்துகொண்டு வரும் நிலத்தடிநீர் மட்டம் எனக் சிக்கல்களை உள்வாங்கிக் கொண்ட நாம் அதனைப் பற்றிக் கேள்வி எழுப்பாமல் ,அதற்கான தீர்வை நோக்கி நகர மறுக்கின்றோம்.
  நகரத்தின் நுகர்வு, உலகமயமாக்கலின் பாதிப்பு, இன்று சிற்றூருக்கும் சென்றதன் விளைவு நீர்நிலைகள் தொடர்ச்சியாக மாசுபடுத்தப்பட்டு இன்று “நன்னீரைத் தேடி” அலைய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளோம் !
  எப்படித் தண்ணீர் நம்மிடமிருந்து சுரண்டப்பட்டு வருகிறதோ, அதே போலவே நமது நிலமும், நமது உணவிற்கான ஆதாரமாகிய நமது மரபு விதைகளும் நம் கையை விட்டுச் சென்று கொண்டு இருக்கிறது. உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்பது மாறி, பணம் இருப்பவனுக்கே நிலம் என்ற நிலைக்கு மறுபடியும் சென்று கொண்டு இருக்கிறது. நிலப் பறிப்புச் சட்டத்தின் மூலம் ஒட்டு மொத்த விளைநிலங்களையும் பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்குத் தாரை வார்க்க மத்திய அரசு துடித்துக் கொண்டு இருக்கிறது. சட்டம் இப்பொழுது கை விடப்பட்டாலும், அதனை மறைமுகமாக நிறைவேற்ற மோடி அரசாங்கம் துடித்துக் கொண்டு இருக்கிறது. “நம் நிலம் யாருக்கானது” என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் .

  விதைகள் பெண்கள் கையில் இருந்த வரை, வேளாண்மை நமது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஒவ்வொரு பருவ நிலைக்கும் ஏற்ற விதைகளை நமது முன்னோர்கள் அறிந்து வைத்து இருந்தனர். விதை நெல்லைச் சேகரித்து வைப்பது என்பது நமது வாழ்வியல் முறையாக இருந்து வந்தது. ஆனால் இன்று விதைகள் முழுவதும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்று கொண்டு இருக்கிறது. மரபணு விதைகளால் வேளாண்மையின் உணவுச் சங்கிலி அறுந்து கிடக்கிறது. “விதைகளே பேராயுதம்” எனும் நம்மாழ்வார் ஐயாவின் கூற்றின் படி, மீண்டும் நமது மரபு விதைகளை உழவனின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவர முயல வேண்டும் .

  நாம் நமது மண்ணை இழந்து விட்டு, ஏதிலிகளாக வெளியேற்றப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். இவற்றை முன்னெடுத்துச் செயல்படுத்த வேண்டிய அரசுகளே, பன்னாட்டு நிறுவனத்தின் ஆதாயவெறிக்குத் துணை போகிகொண்டு இருக்கின்றன. அவர்களிடமிருந்து நமது நீர்நிலைகளை, நிலங்களை, நமது மரபு விதைகளை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதனைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கவும், களச் செயல்பாட்டாளர்களை அடையாளம் காணவும் கருத்தரங்கை நிகழ்த்த உள்ளோம். தொடர்ச்சியாகக் களசெயல்பாடுகளில் இயங்கி வரும் கருத்தாளர்கள் இதனைப் பற்றிய தெளிவினை கருத்துகளாக நம்மிடம் பகிர்வதோடு அல்லாது, கலந்துரையாடலும் நிகழ்த்த உள்ளனர் .
   அனைவரும் கலந்து கொள்ளுங்கள். ஒன்று சேர்வோம்! ஒற்றுமையாகச் செயல்படுவோம்!

தமிழ்ச் செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக