திங்கள், 12 அக்டோபர், 2015

துலுக்கப்பயலே! 7 -வைகை அனிசு

94vaigaianeesu-name

 


துலுக்கரை நினைவுபடுத்தும் ஊர்களின் பெயர்கள்
  தேனி மாவட்டத்தில் துலுக்கர்பட்டி என்ற பொம்மிநாயக்கன்பட்டியும், இராமநாதபுரத்தில் துலுக்கபட்டி, விருதுநகர் மாவட்டத்தில் துலுக்கபட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் துலுக்கனூர், மேலத்துலுக்கன் குளம், துளுக்கங்குப்பம், அருப்புக்கோட்டைப்பகுதியில் துலுக்கன் குளம், முதுகுளத்தூர் வட்டத்தில் துலுக்கன்குறிச்சி, அவிநாசி வட்டத்தில் துலுக்கன்முத்து, காஞ்சிபுரம் வட்டத்தில் துலுக்க தண்டலம், என ஊர்கள் உள்ளன. துலுக்க பசலை என்ற கீரையும், துலுக்க மல்லிகை என்ற மல்லிகைப்பூவும் உள்ளன. துலுக்க மல்லிகைப்பூவை இந்துக்கள் கோயில்களில் பூசைக்குப் பயன்படுத்தமாட்டார்கள்.
நெறிமுறை மொழிக்கலப்பு
  முசுலிம் தமிழ்ச்சமுதாயத்தாரிடையே ஏற்பட்ட கலப்பால் தமிழ்மொழியில் ஏராளமான அரபு, பாரசீக, உருதுச் சொற்கள் கலந்தன. அச்சொற்கள் தமிழ்மொழியின் ஒலி மரபுக்கேற்றபடி மாறித் தமிழ்மொழியிலிருந்து பிரிக்க முடியாதபடி இரண்டறக்கலந்து விட்டன. கிசுதி, மகசூல், பசலி, பட்டா, பட்டாதார், சமீன், சமீன்தார், மிராசு, மிராசுதார், தாசில்தார், மனு, சாலி, சமாபந்தி, கசானா, இரசுதா, அமுல், வாரிசு, நமூனா, கச்சேரி, சவான் முதலான சொற்களும், நீதித்துறையில் பிராது, வாய்தா, தர்பார், மகால், (இ)ரசா, வக்கீல், வக்காலத்து, சல்தி, சாசுதி, சபர்தசுது, செலாவணி, நாசர், முன்சீப், அசல், நகல், இனாம், தசுதாவேசு, ஆசர், கலாட்டா, டவாலி, டபேதார், தண்டோரா, மாமூல், அமீனா, பந்தோபசுது முதலியனவும் பாரசீக, இந்திச் சொற்களாகும்.
  சிற்றுண்டி வகைகளில் சிலேபி, பூந்தி, இலட்டு, அல்வா, பூரி, சப்பாத்தி, மசாலா, பக்கோடா, கிசுமிசு, பிரியாணி, குருமா, புரோட்டா, சால்னா, பாதாம்கீர், சர்பத், சேமியா இவையனைத்தும் முசுலீம்களின் தொடர்பால் உருவான உணவு வகைகளாகும்.
   துணிக்கடைகளில் கறார்விலை என எழுதப்பட்டிருக்கும். கறார் பாரசீகச் சொல். தாவணி, துப்பட்டி, கசம், சாதா, நகாசு, சரிகை, சோளி, நாசூக்கு முதலியன உருதுச் சொற்கள். (இ)ராசா, மகாராசா, சுல்தான், பாதுசா, மாசி, இராசினாநாமா, ஃகோதா ஆகியவையும் உருதுச்சொற்களாகும். மேசை, அலமாரி, சன்னல், லோலக், புல்லாக்கு, அத்தர், பாதுகாப்பு படைவீரர்களிடையே காணப்படும் தோட்டா, அவில்தார், சமேதார், சுபேதார், கப்சிப் மக்கர், மசுது, துக்கடா, டப்பா, தாசா, நிசார், தொப்பி முதலியனவும் கலப்புச் சொற்களேயாகும்.
  பிர்கா, தாலுக்கா, சில்லா, மராமத்து, தபால், மத்தாப்பு, பட்டாசு, குசுதி, பயில்வான், அலாதி, குசி, பசார், சால்சாப்பு, தகராறு, (இ)ரகம், சவாபு இவையனைத்தும் தமிழ் மக்களின் பேச்சு வழக்கில் முசுலிம்களின் தொடர்பால் உருவான சொற்களாகும். நம் நாட்டைக்குறிக்கும் ~ இந்துத்தான்~ பாரசீகச் சொல்லே.
  தம்மை முசுலிம்கள் என்றே அழைக்க விரும்பும் பெரும்பாலோனோர் தமக்கென ஓர் இன அடையாளம் இருப்பதை மறக்கும் அளவுக்கு வரலாற்றில் திரிபுகள் புகுத்தப்பட்டுள்ளன. இதை கவனமாகக்கொண்ட அறிவுவாணர்கள் முசுலிம்கள் மத்தியில் அவ்வப்போது தூண்டுதல்களை ஏற்படுத்தி வரலாற்றுப்பிழையை ஏற்படுத்தி வந்துள்ளனர்.
  முசுலிம்கள் தங்களை இனமாகக் காண்பதைத் தடுக்கும் பல காரணிகள் உள்ளன. அவற்றில் முதன்மையானது, இவர்களிடையே புகுத்தப்பட்ட உட்பிரிவுகளாகும். எனவே அப்பிரிவுகளுக்குள் அகப்பட்டுக்கொள்ளாமல் தம்மை முசுலிம் என அடையாளப்படுத்துவதே நல்லதாக அமையும். அதே வேளையில் மார்க்க அடையாளம் இனஅடையாளமாக முடியாது.
இனத்தால் திராவிடர்கள்
தேசத்தால் இந்தியர்கள்
மொழியால் தமிழர்கள்
மதத்தால் முசுலீம்கள்
என்ற உணர்வை வெளிப்படுத்தவேண்டும். இந்துக்கள், கிறித்தவர்கள், முசுலிம்கள் என அனைத்துச் சமயத்தாரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும். இந்தியாவை வல்லரசாக்க அனைவரும் பயணப்படவேண்டும் என்ற தாரக மந்திரத்தை நாம் அனைவரும் கையிலெடுக்கவேண்டும்.
நிறைவு
மேற்கோள் இதழ்களும் நூலும்
1.காக்கைச்சிறகினிலே மாத இதழ்-1.9.2015
2.அழிந்த சமீன்களும்-அழியாத கல்வெட்டுகளும், அகமது நிசுமா பதிப்பகம்
3.தீக்கதிர் நாளிதழ்
vaigaianeesu_name_peyar


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக