si.paa.athithanaar_athithanar
athithanar-viruthu02
  சி.பா.ஆதித்தனார் 111-வது பிறந்தநாள் மற்றும் இலக்கிய பரிசளிப்பு விழா நேற்று மாலை ராணி சீதை மன்றத்தில் நடந்தது.
  சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசு உரூ.2 இலட்சம் ‘தங்கர்பச்சான் கதைகள்’ என்ற நூலுக்காகப் பெற்ற தங்கர்பச்சான் ஏற்புரையாற்றினார். அப்பொழுது பின்வருமாறு தெரிவித்தார்:
  இலக்கியப் பரிசுகளும், விருதுகளும் இலக்கியத் தரத்தை உயர்த்துவதற்காகத் தரப்படுகின்றன என்பதைவிட இலக்கியவாதிகளை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்காகவே தரப்படுவதாக உணர்கிறேன். திரைப்படத் துறையைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் என் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வது இலக்கியத்தின் வழியாகத்தான். திரைப்படப் படைப்பாற்றலுக்காக எனக்கு அளிக்கப்படும் விருதுகளையும், பரிசுகளையும் விட இலக்கியத்திற்காக அளிக்கப்படும் அங்கீகாரத்தில்தான் எனக்கு மனநிறைவும், பெருமையும் இருக்கிறது.
  நான், எழுத்தாளனாக வேண்டும் என்பதற்காக எழுதத் தொடங்கியவன் இல்லை. என்னைச் சுற்றிலும் நிகழும் நிகழ்வுகளையும், அதனால் எனக்குள் ஏற்பட்ட தாக்கங்களையும் பதிவு செய்வதற்காகவே எழுதினேன். 1984-ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கினேன். 1990- இல் திரைப்படத்துறையில் ஒளிப்பதிவாளனாக அறிமுகமானேன். அன்றிலிருந்து இன்று வரை இரண்டு துறைக்கும் சேர்த்து பல விருதுகளையும், பரிசுகளையும் அரசாங்கங்களும், தனியார் அமைப்புகளும் நிறைய கொடுத்திருக்கின்றன.
  அவற்றை விடவும் மிகுதியான மகிழ்ச்சியும், மனநிறைவும் இந்த சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசின் மூலமாகக் கிடைத்திருக்கிறது. நான் யாருக்காக, யாரைப்பற்றி, எனது குடும்பத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிந்திக்கிறேனோ, உலகம் முழுமையும் உள்ள அந்தத் தமிழர்கள் அனைவருக்கும் இந்தப் பரிசின் மூலம் தினத்தந்தி நாளிதழ் என் படைப்பினை அறியச் செய்திருக்கிறது.
  நான் சந்திக்கும் மக்களெல்லாம் அடுத்ததாக என்ன படம் வெளிவருகிறது என்று மட்டும்தான் கேட்டிருக்கிறார்கள். நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் இயங்கி வந்தாலும் அந்தப் படைப்புகள் பற்றி ஒருவர் கூட கேட்பதில்லை. விவரமறிந்தவர்கள் இதுபோன்ற கேள்வியைக் கேட்கும் பொழுதெல்லாம் எனது ஆதங்கத்தையும் நியாயமான கோபத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறேன். இனிமேல், அடுத்து என்ன படம் என்பதோடு, என்ன எழுதுகிறீர்கள் என்னும் கேள்வியையும் என்னைச் சந்திப்பவர்கள் கேட்பார்கள் என நம்புகிறேன். அதற்குக் காரணம் தினத்தந்தி மட்டுமே.
போர்வாள்
  அந்தக் காலத்தில் பெரும் படிப்புப் படித்தவர்கள் மட்டுமேதான் செய்தித்தாளைப் படிக்க முடியும்; அவர்கள் படித்துக்காட்டுவதைத்தான் மற்றவர்கள் தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆங்கிலத்தையும், சமக்கிருதத்தையும் கொண்டு பெயரளவிற்குக் கொஞ்சம் தமிழ்ச் சொற்களைக் கலந்துதான் தமிழ்ப் பத்திரிக்கை எனும் பெயரில் அன்றைக்குப் பத்திரிகைகள் வெளிவந்தன. சி.பா.ஆதித்தனார் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் பரண் மீது போடப்பட்டிருந்த மக்கள் தமிழைத் தட்டியெடுத்துப் படிப்படியாக அதுவரை பத்திரிகை என்றால் என்னவென்றே தெரியாத தமிழர்களின் கைகளிலெல்லாம் கொடுத்தார்.
  தாய் மொழியைக் கூடப் படிக்கத் தெரியாத நம் தமிழர்களைப் பெரிய பெரிய கொட்டை எழுத்துகளில் அச்சிட்டுத் தமிழைச் சொல்லித் தந்தார். ஆதித்தனார் ஐயாவின் பணி என்பது ஓர் இயக்கம். அந்த இயக்கம் இன்று விரிவடைந்து மூன்றாம் தலைமுறையால் வளர்த்தெடுத்துத் தமிழர்களின் குரலாகவும், மனச்சான்றாகவும், போர்வாளாகவும் மாறியிருக்கிறது.
தமிழ் மக்களின் நலனுக்காக
  தமிழர்களைத் தமிழர்களாக மாற்ற மொழியுணர்வையும், இன உணர்வையும் விதைத்துத் தங்களின் அரசியலைத் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் மையப் புள்ளியாகச் செயல்பட்டு ‘நாம் தமிழர்’ இயக்கத்தை உருவாக்கினார். திராவிட வலையில் சிக்குண்ட தமிழர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக அவர் மேற்கொண்ட அரசியல் பணியின் மூலமாகத்தான் தமிழர்கள் அனைவரும் இன்று தங்களைத் தமிழராக உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
முதன்மை வாய்ந்தது
  தமிழைப் படிப்பதையும், தமிழில் பேசுவதையும் கேவலமாகப் பார்க்கக் கூடிய சமுதாயத்தை உருவாக்கிவிட்ட இந்தச் சூழலில் அதிகப்படியாகத் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் உயிர் நாடியாக தினத்தந்தி விளங்கிக் கொண்டிருக்கிறது.
  பொருளாதாரத்திற்காகவும், கல்விக்காகவும், உறவுகளையும், மண்ணையும், மொழியையும் பிரிந்து உலகம் முழுக்கப் பரந்து வாழும் தமிழர்கள் அனைவருக்கும் பத்திரிகை கிடைக்க வேண்டும் என்பதற்காக முன்னோட்டமாகத் துபாயில் தினத்தந்தி பதிப்பு தொடங்கப்பட்டிருப்பது தமிழன் என்ற முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. வேறெந்த தமிழ்ப் பத்திரிகையும் இதுபோன்று வெளிநாட்டில் பதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த அருவினையை ஆற்றியவர் இளையவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தனார்தான்.
  இத்தகைய பெருமை வாய்ந்த தினத்தந்தி பெயரால் வழங்கப்படுகின்ற இந்த இலக்கியப்பரிசினை இதுவரை நான் பெற்ற அனைத்து விருதுகள், பரிசுகளைக் காட்டிலும் முதன்மை வாய்ந்ததாகக் கருதுகின்றேன்.
  எனது 23-ஆம் அகவையில் எழுதத் தொடங்கினேன். சிந்திக்க முடிந்ததையெல்லாம் படைப்புகளாக்குகிறேன். அவற்றுள் சில திரைப்படங்களாக உருவாகின்றன; சில சிறுகதை, குறும்புதினம், புதினங்களாக வடிவம் பெறுகின்றன. சமூகத்தின் மீதான எனது கோபத்தையும், ஆற்றாமையையும் கட்டுரைகளாக்கிப் பத்திரிகைகளில் வெளியிடுகின்றேன். உலகம் முழுமையும் இருக்கின்ற தமிழர்களைக் கணக்கெடுத்தால் எட்டரை கோடிக்கு மேல் வரும். ஆனால் எவ்வளவு பெரிய பேர் எடுத்த தமிழ் எழுத்தாளனின் நூல்களும், அதன் விற்பனையில் ஐந்தாயிரத்தைத் தாண்ட படாதபாடு பட வேண்டியிருக்கிறது.
புத்தகங்கள்
  எழுத்தாளனையும், உழவனையும் பாதுகாக்காத நாடு உருப்பட வழியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை; உருபட்டதாக சரித்திரமும் இல்லை. ஏற்கெனவே புத்தகங்கள் படிக்கின்ற பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. புத்தகங்கள் விற்றால்தான் அதில் ஒரு சிறு பகுதியின் மூலமாக எழுத்தாளனுக்கு வருவாய் கிடைக்கும்.
  எத்தனையோ செல்வந்தர்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என இவர்கள் நடத்தும் விழாக்கள், கணக்கற்ற குடும்ப விழாக்கள், கொண்டாட்டங்கள், திருமணங்கள் என எங்கு பார்த்தாலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. இந்த நிகழ்வுகளில் பொன்னாடை பூங்கொத்துக்களுக்கு மாற்றாகச் சமுதாயத்திற்குப் பயன்படும் நூல்களைத் தேர்வு செய்து பரிசுப்பொருளாகத் தரும் பழக்கத்தை ஒவ்வொரு தமிழனும் ஏற்படுத்திக் கொண்டால் எழுத்தாளன் உயிர் பெறுவான். மனித குலத்தின் எதிர்காலம் வளம் பெறும்.
பாதுகாக்க வேண்டும்
  ஒரு பொறியாளர்போல், ஒரு மருத்துவர்போல், ஓர் அரசியல்வாதி போல், ஒரு தொழிலதிபர் போல் ஒரு தீவிரமான எழுத்தாளனை யார் நினைத்தாலும் உருவாக்கிவிட முடியாது. எங்கிருந்தோ ஒருவன் பிறப்பான். அப்படிப்பட்டவர்களை இந்த சமுதாயம்தான் பாதுகாக்க வேண்டும்.
  அவனைக் கொண்டாடாமல் போனாலும் பரவாயில்லை; அவனது படைப்புகளைப் படிக்காமல் தொடர்ந்து மேலும் மேலும் எழுதுங்கள் எனச்சொல்லாதீர்கள். தனது படைப்புகளைப் படிக்காமல் தன்னைக் கொண்டாடுவதை உண்மையான எந்த எழுத்தாளனும் விரும்ப மாட்டான்.
தமிழர்களின் சொத்து
  எனது முப்பது ஆண்டுகளுக்கு மேலான இரவு பகல் பாராது உருவாக்கப்பட்ட படைப்புக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பரிசினைத் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன். இந்தப் பரிசு சோர்ந்து போயிருந்த என்னை மீண்டும் ஊக்கப்படுத்தி எழுப்பி உட்கார வைத்திருக்கிறது. தமிழர்களின் சொத்தாக மாறிப்போன தினத்தந்தி பத்திரிகைக்கும், அதன் நிறுவனத்திற்கும், நடுவர் குழுவிற்கும், இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆதித்தனாருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
logo-muthirai-dinathanthi