வெள்ளி, 27 நவம்பர், 2015

தமிழறிஞர் நொபொரு கராசிமா இயற்கை எய்தினார்!






தமிழறிஞர் நொபொரு கராசிமா 
இயற்கை எய்தினார்!

  தமிழராய்ச்சியாளர், வரலாற்றறிஞர் திரு நொபொரு கராசிமா அவர்கள் காலமானார்.

  இவர்  உலகத் தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின்( International Association of Tamil Research  / IATR) முன்னாள் தலைவர் (1989-2010) ஆவார்.

  நொபொரு கராசிமா 1995இல் தஞ்சாவூரில் நடைபெற்ற 8ஆவது உலகத்தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தியவர். இவர் 2010 இல் கோயம்புத்தூரில் நடைபெற்ற  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் புறக்கணித்தார்; தமிழ் மாநாடுகளில் அரசியல் தலையீடுகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் புறக்கணிப்பதாகக் கூறினார்.தோக்கியோ பல்கலைக்கழகத்திலும்(University of Tokyo) தைசோ பல்கலைக்கழகத்திலும் (Taisho University) பின்னோய்வு சிறப்புப் பேராசிரியராக (Professor Emeritus) இருந்தார்.

   இந்திய - சப்பானிய உறவுக்கான இவரது  பணியை -குறிப்பாகத் தமிழ் ஆராய்ச்சிப்பணியை-ப் பாராட்டி, இந்திய அரசால் தாமரைத்திரு விருது இவருக்கு 2013 இல் வழங்கப்பெற்றது. அப்போது அவரால் இந்தியாவிற்கு வரமுடியாத நிலை இருந்தமையால், அப்போதைய தலைமையமைச்சர் மன்மோகன்(சிங்கு) சப்பான் சென்றபொழுது  அவரிடம் நேரில் அளித்தார்.

 தென்னாசியப் படிப்புகளுக்கான சப்பான் சங்கத்தின் (Japan Association for South Asian Studies) தலைவராக 1996 முதல் 2000 வரை பணியாற்றினார்.

 தென்னாசியப் பண்பாடு குறித்த தொலைக்காட்சி உரையாளர்  என்ற முறையிலும் இவர் புகழ்பெற்று விளங்கினார்.

 மனைவி தகாகோ கரசிமா (Takako Karashima), எழுதிய இந்தியா பற்றிய நூல் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இவரையும் மூன்று மக்களையும் மூன்று பேரர்களையும் தவிக்க விட்டு மறைந்துள்ளார். தென்னாசிய ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள் முதலானவர்களுக்கும் இவர் இழப்பு வருத்தம் அளிப்பதாகும்.

 
 சிலநாட்களாக உடல் நலிவுற்று மருத்துவமனையில்  பண்டுவம் பார்த்துவந்தார். இந்த ஆண்டு இந்தியாவுக்கு வருவதாகக் கூறியிருந்தார்.அதற்குள் இப்படியொரு துயரம் நேர்ந்துவிட்டது" எனத் திரு ஒய்.சுப்பராயலு  எழுத்தாளர் இரவிக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

  சோழர்கால வரலாற்றைக் கல்வெட்டுகளின் துணையோடு துல்லியமாக முன் வைத்ததில் அவரது பங்களிப்பு முதன்மையானது திரு கராசிமா அவர்களும் பேராசிரியர் ஒய்.சுப்பராயலு அவர்களும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகள் தமிழ் வரலாற்றை எழுதுவதில் மிகப் பெரிய தாக்கத்தை நிகழ்த்தியிருப்பதை எவரும் மறுக்கமுடியாது

இந்தியச் சிற்றூர்கள் தன்னிறைவுபெற்ற குடியரசுகளாகத் திகழ்கின்றன' என்று மெட்கால்ஃப் கூறியதை வழிமொழிந்துதான் கார்ல் மார்க்சு வரை பல்வேறு அறிஞர்களும் இந்தியாவைப்பற்றிப் பேசினார்கள். அதைச் சோழர்கால கல்வெட்டுகளை ஆதாரமாகக்கொண்டு கராசிமா மறுத்தார்.

  தமிழ்நாட்டில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரங்கள்  இராசேந்திர சோழன் காலத்திலிருந்துதான் கிடைக்கின்றன என்று அவர் நிறுவினார். தமிழ்நாட்டில் சாதிகளின் வரிசை மாற்றியமைக்கப்பட்டு அதிகாரப் படிநிலை உருவாக்கப்பட்டது அரசியல்  நிலைப்புத்தன்மை இல்லாதிருந்த  13 ஆம் நூற்றாண்டைச் சுற்றித்தான்  நடந்தது என்று திருக்கச்சூர் கல்வெட்டுகளை ஆதாரமாகக்கொண்டு அவர் விளக்கினார்.

 அறிவியல் அணுகுமுறையோடு தமிழக வரலாற்றை எழுதிய ஒருசிலருள் திரு கராசிமா  முதன்மையானவர். அவரது இழப்பு ஏற்படுத்தும் வெற்றிடத்தை ஈடுசெய்யக்கூடியவர்கள் இங்கே எவருமில்லை என்ற உண்மை அவரது மரணத்தைத் தாங்கமுடியாததாக்குகிறது. (இரவிக்குமார்,நிறப்பிரிகை).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக