64uurvilakkam07

ஊர்விலக்கம்

  தமிழகத்தில் சாதிவிலக்கம் அல்லது ஊர் விலக்கம் என்று சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் பழக்கம் பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இலைமறைகாயாக இருந்து வருகிறது. சாதிவிலக்கம் ஒவ்வொரு சமூகத்திலும் அல்லது ஒவ்வொரு சாதியிலும் அல்லது ஒவ்வொரு மதத்திலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக நடைபெறுகிறது. சாதிவிலக்கத்தால் பாதிப்படைந்தவர்கள் இன்றும் பல ஊர்களில் உள்ளனர். இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டவர்களிடம்
யாரும் பேசக்கூடாது
வீட்டு வாசலைக் கூட மிதிக்க கூடாது
தண்ணீர் வாங்கிக் குடிக்க கூடாது
எவ்விதக் கொடுக்கல் வாங்கலும் வைத்துக்கொள்ளக் கூடாது
எந்த விழாக்களிலும் பங்குபெறக்கூடாது
இறந்தாலும் சென்று பார்க்க கூடாது
எந்த நகரத்திலும் அமைப்பிலும்(சமாத்திலும்) சேர்க்கக் கூடாது
எவ்வித உதவியும் பெறக்கூடாது
தனிமைப்படுத்தி வாழச் செய்தல்
உறவுகளின்றித் தவிக்க வைத்தல்
தீட்டுப்பட்டவராகக் கருதுதல்
வீட்டை, ஊரை, மாநிலத்தை விட்டுத் துரத்தி அடித்தல்
போன்ற கட்டுப்பாடுகளைத் தண்டனை என்ற பெயரில் விதிப்பர். மத்திய மாநில அரசுகள் பல கடுமையான சட்டங்கள் தீட்டினாலும் சாதிவிலக்கம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. சாதிவிலக்கத்தால் பாதிப்படைந்தவர்கள் ஏராளமாக உள்ளனர்.

பின்னத்தேவரும், தேவர்அவை(சபை)யும்
  பண்டைய காலத்தில் எட்டு நாட்டின் தலைவராகப் பட்டம் சூட்டப்பட்ட பின்னத்தேவருக்கு கம்பளி, பிடிசெம்பு, பிரம்பு, பாதகட்டை, காளாஞ்சி செம்பு போன்றவை அரசுசின்னங்களாக வழங்கப்பட்டன. அவர் நாட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பொழுதும் தனிப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பஞ்சாயத்துக்களுக்குத் தலைமை தாங்கும் பொழுதும் அரசரால் கொடுக்கப்பட்ட அந்த இராச அரசுகம்பளத்தினை விரித்தே அதன்மீது அமர்வார். அரசர் கொடுத்த பாதக்கட்டையை அணிந்து கொண்டும், பொற்பிரம்பினைக் கையில் பிடித்துக் கொண்டும்தான், கூட்டங்களை நடத்துவார். இனி அவரின் அதிகாரங்கள் பற்றிக்காண்போம்.
  ஒருவரைச் சாதியிலிருந்து நீக்குவதற்கும், சேர்ப்பதற்கும் அதிகாரமுடையவராக இருந்தார். ஓர் ஆண் வேறு சமூகத்துப் பெண்ணையோ, பெண் வேறு சாதி ஆணையோ திருமணம் செய்து கொண்டால் அவர்களையும் திருமண உறவுகள் தடை செய்யப்பட்டுள்ள (அதாவது பங்காளி உறவுடையவர்களைத் திருமணம் செய்து கொள்பவர்களையும்) தனது அதிகாரத்திற்கும் தனக்குத் துணையாக இருக்கும் தேவர் அவை(சபை)யின் அதிகாரத்திற்கும் தனக்கும் மறுப்பவர்களையும் சாதி நீக்கம் செய்கின்ற அதிகாரம் திருமலை பின்னத்தேவருக்கு இருந்தது. அவ்வாறு “ஒருவரைச் சாதியிலிருந்து நீக்கிவிட்டேன். இவனோடு இனிச் சுத்தக் கள்ளன் யாரும் கொள்வினை, கொடுப்பினை வைத்துக் கொள்ளக்கூடாது” எனச் சொல்லி வலப்புறமும், இடப்புறமும் திரும்பி மூன்று முறை தனது எச்சிலைத் துப்பிவிடுவார். அன்றிலிருந்து அவர் சாதியிலிருந்து விலக்கப்பட்டவராக கருதப்படுவர். யாராவது மீறி அவர்களோடு திருமணம் உறவு வைத்துக்கொண்டால் அவர்களும் விலக்கப்பட்டவர்களாகக் கருதப்படுவர். அவர்கள் ஒதுக்கல் வகை எனப்பட்டனர். அவர்கள் தங்களுக்குள்ளேயே திருமண உறவுகளை வைத்துக்கொண்டனர். அதனால் இதற்குள்ளேயே அவர்கள் தனிக்குழுவாக உருவெடுத்தனர்.
  இவ்வாறு விலக்கி வைப்பதோடு விலக்கப்பட்ட ஒருவரை சாதியில் சேர்த்துக் கொள்கின்ற அதிகாரமும், பின்னத்தேவருக்கு இருந்தது. சாதிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் தனது தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, தேவர் அவையைச் சேர்ந்தவர்களின் காலில் விழுந்து வணங்கி அதற்குரிய தண்டத்தொகையைத் தேவர் அவைக்குச் செலுத்தி விட்டால் அவரைச் சாதியில் மீளவும் சேர்த்துக் கொள்ள இயலும். அப்படிச் சேர்க்கும் பொழுது திருமலை பின்னத்தேவர் இன்று முதல் இவன் சாதிமகன் சுத்தக் கள்ளன் எனச் சொல்லித் தனது பிடி செம்பிலுள்ள தண்ணீரை எடுத்து அவரது தலையில் மூன்று முறை தெளித்துவிட்டால் அவர் அன்றிலிருந்து சாதியில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுவார். அவர் பின்பு சுத்தக் கள்ளர்களுடன் திருமண உறவுகளை வைத்துக் கொள்வர். அப்படிப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கு வழக்கைத் தொடுக்கின்ற வாதிகள் அவருக்கு ஐந்து பணம் காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். இச்சாதிக்குள் அவரது தீர்ப்பே இறுதியானதாக கருதப்பட்டது. அதன் மீது மேல்முறையீடு மதுரையிலுள்ள கோனார்கள் சாவடிக்கும், அதிலிருந்து மேல்முறையீடு கீழ்நாடு நரசிங்கம் பட்டியிலுள்ள இராமாயணம் சாவடிக்கும் எடுத்துச் செல்லப்படும். இறுதி மேல்முறையீடு இராமநாதபுரம் அரசர்சேதுபதியிடம் எடுத்துச் செல்லப்படும்.
( சான்று :பிறமலைக்கள்ளர் வாழ்வும் வரலாறும்-பக்கம் 486)
அரவாணிகள் ஊர்விலக்கம்
   அரவாணிகள் என்ற திருநங்கைகளும் சாதி விலக்கம் செய்கின்றனர். அதனை மூன்று வகைகளாகப் பிரிக்கின்றனர்.
1. ஒறுப்புத்தொகை கட்டுதல்(தண்டு தாவா).
2. ஒதுக்கி வைத்தல் (உக்கா பணி பந்த் செய்தல்)
3. நெற்றிப்பொட்டில் சூடு வைத்தல்( (ஞ்)சீடா தூக்குதல்)
ஒறுப்புத்தொகை கட்டுதல்
  எந்தத் தவறு செய்தாலும் பஞ்சாயத்தார் முதலில் உசாவி இனி இதுபோல செய்யக்கூடாது; இதுவே முதலும் கடைசியும் என எச்சரித்து அறிவுரை கூறி மன்னித்துவிடுவர். பிறகு மீண்டும் மீண்டும் அந்தத் தவறு நிகழ்ந்தால் குறைந்தது உரூபாய் 50 ஒறுப்புத்தொகையாகக் கட்டவேண்டும். இத்தொகை சிறிய தவறுகளுக்கு மட்டும் தான். பெரிய தவறு என்றால் எடுத்த உடனே உரூபாய் 501 என்று தொடங்கும். இங்ஙனம் ஒறுப்புத்தொகை கட்டிய பிறகு மீண்டும் தவறு செய்தால் முன்பு கட்டிய ஒறுப்புத்தொகையைவிட இரண்டு மடங்காகும். இதனைத் ‘தண்டு தாவா’ என அழைக்கின்றனர். தமிழகத்தில் 501 முதல் 5001 வரை ஒறுப்புத் தொகை பெறப்படுகிறது. வடமாநிலங்களில் 10,000 முதல் 1,00,000 வரை விதிப்பதாகக் கூறுகின்றனர்.

சமூகத்திலிருந்து ஒதுக்கிவைத்தல் (உக்காபணி பந்த்)
  சிறிய தவறுகளைச் செய்துவிட்டு ஒறுப்புத் தொகை கட்டி மீண்டும் மீண்டும் தவறுகள் செய்தவர்களை, ஒறுப்புத் தொகை கட்ட மறுப்பவர்களை, பஞ்சாயத்துக்கு கட்டுப்படாதவர்களை   தொழுகைக்கழகத்தை (சமாத்தை) விட்டு நீக்கி விடுதலே ‘உக்காபணி பந்த் என்ற பெயரில் நிகழ்கிறது. தவறு செய்தவர்களின் கையில் ஒன்றேகால் உரூபாய் முதல் ஐந்தே கால்உரூபாய் வரை கொடுத்து இந்த நிமிடம் முதல் தொழுகைக்கழகம்(சமாத்) சார்பாகத் தள்ளி வைக்கிறோம் என மாதா முன்பு சத்தியம் செய்து அறிவிப்பது ‘உக்காபணி பந்த்’ ஆகும். இதனைப் பஞ்சாயத்தார் மேற்கொள்வர்.
நெற்றிப் பொட்டில் சூடு வைத்தல் /(ஞ்)சீடா தூக்குதல்
  ஒறுப்புத்தொகை விதித்துச் சமூகத்தை விட்டுத் தள்ளி வைத்தும் திருந்தாமல் மீண்டும் மீண்டும் தவறு செய்கின்றவர்களைத்தான் பஞ்சாயத்தார் இத்தண்டனைக்குப் உட்படுத்துவர். நெற்றியில் ஒரு ரூபாய் வில்லையை நெருப்பில் நன்கு சுட்டுப் புதிய வைப்பதை சீடா தூக்குதல் என்கின்றனர். யாருக்கும் அஞ்சாமல் தொழுகைக்கழக விதிமுறைகளுக்குக் கட்டுப்படாமல் தண்டத் தொகையைக் கட்டிவிட்டு மறுபடியும் மறுபடியும் தவறு செய்பவர்களைத் தலைமுடியை மொட்டையடித்து இது அடங்காத மாடு, கறவாத மாடு, “பெரியவங்க(நாயக்) எல்லாம் சேர்ந்து (ஞ்)சீடா தூக்குங்க” என்று கூறி 200 உரூபாய் கொடுத்து மாதா முன்பு சத்தியம் செய்து நெற்றிப் பொட்டில் சூடு வைத்தல் எனக் கூறுகின்றனர். இதனைப் பெரிய தண்டனையாகக் கருதி நிறைவேற்றுகின்றனர். இத்தகைய தண்டனை பெற்றவர்கள் சிறியதாக திருடிவிட்டு வேறு எங்கும் செல்லமுடியாது. காரணம் நெற்றியில் வைத்த பொட்டு காண்பித்துவிடும்.

தேவாங்கர் செட்டியார்
   தேவாங்கர் செட்டியார் சமூகத்தில் சாதிவிலக்கம் கடைபிடிக்கப்பட்டிருந்தது, அதாவது பரத்தமை செய்கின்றவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள். அப்படி ஏற்பட்டால் குலத்திலிருந்து விலக்கப்படுவார்கள். வேறு சமூகத்தில் வைப்பு வைத்துக்கொண்டாலும் இதே தடை உண்டு. தேவாங்கர்களில் சிவாச்சாரியார்கள் வேறு வீடுகளில் உண்ணமாட்டார்கள். மற்றவர்கள் பிராமணர்கள் அன்றி வேறு வகுப்புகளில் உண்ணமாட்டார்கள்.
ஆதாரம்: தேவாங்கர் குல வரலாறு என்ற நூலில் கே.சி.சுப்பையா (செட்டியார்) எழுதி சௌடாம்பிகா அறக்கட்டளையில் வெளியிடப்பட்ட நூலில் பக்கம்-15இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 புலையர் சமூகம்
மலைவாழ் மக்களிடையே புலையர் என்ற சமூகம் உண்டு. அந்தப் புலையர் சமூகத்தில் கருகமணியினைக் கழுத்தில் அணிவித்த பின்னரே திருமணம் மூப்பன் தலைமையில் நடைபெறும். சாதிவேறுபாடுகள் புலையர் சமுதாயத்தினரிடையே உண்டு. முறை மாப்பிள்ளை முறைப் பெண்ணையே திருமணம் செய்து கொள்ளவேண்டும். வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டால் தங்கள் சாதியிலிருந்து ஒதுக்கி வைத்து விடுகின்றனர்.
(ஆதாரம்.புலையரின் வாழ்வியல் சடங்குமுறைகள். வி.இரா.பவித்ரா. காவ்யா வெளியீடு.பக்கம் 43)
முசுகுந்த வேளாளர்கள்
  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைப்பகுதியில் இவர்கள் வாழ்கிறார்கள். திட்டக்குடி நாட்டாண்மைக்காரரிடம் இவ்வேளாள இனத்தவரின் ஆசாரக் கட்டுப்பாடு பற்றிய ஆவணம் உள்ளது. 915 ஆம் ஆண்டு முசுகுந்த வேளாளரின் முதன்மைத் தெய்வமான முசிறி கைலாசநாதர் ஆலயத்தில் முசுகுந்த நாட்டார்கள் வாசித்து எழுதப்பட்ட ஆவணத்தில் 2 ஆவது பத்தி முதன்மை வாய்ந்ததாக உள்ளது. ஆசார விதிகள் மீறுபவர்கள் உள்ளபடி தண்டனைக்குள்ளாக்கப்படுவர் என்பது அப்பாராவின் மையக்கருத்தாகும். அதன்படி ஒருவன் சபையில் பொய் சொன்னால், திருடினால், கள்ளுண்டால், பொருளை அபகரித்தவனுக்கு உதவி செய்தால், சைவ, பிரமாண வீடுகளைத்தவிர பிற இடங்களில் உணவுண்டால், கலாச்சாரம் தவறி நடந்தால், துர்வழக்கு பேசினால், கட்டுப்பாட்டை மீறி நடந்தால், பங்காளியுடன் சண்டையிட்டால், பாகத் தகராறு(விவேசதம்) செய்தால், ‘திருட்டுப் போனது ஒக்கப்போனாலாவது, போனவர்களுக்கு உதவி செய்தாலாவது’, ‘விபச்சாரம் தோசம்’ செய்தால் “இப்படிப்பட்ட 15 வகையறாவாலும் சென்றவர்களை அவர்களுடைய உறவு முறைகள் ஒன்று சேர்ந்து கயிலாசநாதர் சுவாமிக்கு உரூ.10 முதல் உரூ.100 வரையிலும் கொடுத்து கொள்ளுகிறது. அபராம் போதாது என்ற நிலையில் சாதி விலக்கம் செய்யலாம்.”
திருமண நிகழ்வில் விதி மீறிய செயல்பாடுகள்
  திருமண நிகழ்வில் மாப்பிள்ளைக்காரர் தவறி நடந்தாலும் பெண்காரர் தவறி நடந்தாலும் இந்த இருதிறமெனில் சாதகமாக வந்திருந்து திருமணம் செய்ய வேண்டியதிருக்க, வரமாட்டேனென்றாலும், மாப்பிள்ளைகாரராவது மாமனை மதித்து அழைக்காதிருந்தாவிட்டாலும், இப்படி உறவு முறைக்குப் பகையாய் நடத்தப்பட்ட மாமன்கள், நியாயமிழந்தவர்கள் அந்த ஊர் பெரியதனக்காரரிடம் தெரிவித்து, அவர்களை வைத்து நிகழ்ச்சியைத் தவறில்லாமல் செய்து பிறகு அவர்களிடம் உடன்படிக்கை (முச்சலிக்கா) எழுதி வைக்கவேண்டியது. உடனே விவரப்பத்திரமும் எழுதி, திட்டக்குடி ஆலுத்தூருக்கு அனுப்பவேண்டியது. அவர்கள் குற்றவாளிக்கும் மற்ற சிற்றூர்களுக்கும் ஓலை எழுதி இடம் குறியிட்டு நாட்டைச்சேர்ந்த நியாயத்தைப் பரிகாரம் செய்து, குற்றவாளிக்காக உரூ.1 முதல் 50 வரையிலும் கயிலாசநாத சுவாமிக்காக தண்டத்தொகை பெறலாம். இப்படிப்பட்ட காரியம் நடந்தால் அவர்களை இவர்களிடத்திலும், இவர்களை அவர்களிடத்திலும் உடன்படிக்கையையும் பத்திரத்தையும் (முச்சலிக்காவையும், நிரூபத்தையும்) வாங்கி, மற்றப் பிடாகைத் தலைமைக்காரர்களுக்கு அனுப்ப வேண்டியது. மற்றவர்கள் உடனே இணங்கிய செய்தியைக் கணித்து எல்லோருக்கும் தெரிவித்து கூட்டம் கூட்டி ஞாயத்தை பரிகரித்து மேலே சொன்ன விபரப்படி தீர்வு செய்யவேண்டியது.
(ஆதாரம்:நாட்டுப்புறவியல் ஆய்வுத்தளங்கள் பக்கம் 136)
முசுலிம் மதத்தில் தீண்டாமை
  ஒவ்வோர் ஊரிலும் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியில் அன்றாடம் அறிவிப்புகள் செய்வது வாடிக்கை. ஒருவர் இறந்தாலோ யாராவது புனித மெக்கா சென்றாலோ (இசுலாம்)இறைக்கழக அறிவிப்பு என்று கூறி பள்ளிவாசலில் பணியாற்றும் முஅயித்தின் என்று சொல்லக்கூடிய மோதினார் கூறுவார். இது தற்கால நடைமுறை. பண்டைய காலத்தில் பள்ளிவாசலின் உயரமான இடத்தில் கொட்டு அடிக்கப்படும். அப்போது அனைவரும் ஒன்று கூடி நிகழ்ச்சிகளைக் கேட்பது வழக்கம். அதே போல ஒவ்வொரு நாளும் இறைக்கழக அறிவிப்பு பள்ளிவாசல் கழகத்தலைவரின் அறிவுரைபக்கிணங்க அல்லது ஆணைக்கிணங்க அறிவிப்பு ஏதாவது ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கும். தற்பொழுது கடலோர மாவட்டங்களான திட்டச்சேரி, ஏனங்குடி, வவ்வாலடி போன்ற ஊர்களில் முசுலீம்களில் ஊர்விலக்கம் நடைபெறுகிறது. எழுத்துப் பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் ஊரிலிருந்து விலகிக்கொண்டவர்கள் என்றோ ஊரில் சேர்ந்துகொள்ளாதவர்கள் என்றோ பட்டியல் வைத்துள்ளனர். இதன்படி பட்டியலில் உள்ளவர்கள் வீட்டில் திருமணம் மற்றும் இறப்புச்சடங்குகளைப்பற்றி பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அழைக்கமாட்டார்கள். திருணம் நடைபெறும் வீட்டினர் பக்கீர் என்று அழைக்கப்படும் நபர்களை ஒவ்வொரு வீடாக சென்று திருமணத்திற்கு அழைப்பார்கள். அவ்வாறு திருமணத்திற்கு அழைக்கப்படும்போது ஊர்விலக்கம் செய்தவர்கள் வீட்டிற்கு அழைப்பு இருக்காது. அதன்படி அந்த வீட்டில் உள்ளவர்கள் திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இயலாது. நமது களஆய்வின் படி வவ்வாலடியில் சுமார் 32 வீடுகள் பள்ளிவாசல் என்ற அமைப்பில் இருந்து ஊர்விலக்கம் செய்துள்ளார்கள்.
ஆதாரம்:மக்கள் தாரகை இதழ்
இரவலர்கள்(பக்கீர்கள்) ஊர் விலக்கம்
  கையில் கொட்டு அடித்தும், தலையில் தலைப்பாகை இட்டும் ஊர் ஊராக முசுலிம் சமயப் பாடல்களைப் பாடி வீடு வீடாகச்சென்று ஏதாவது பொருளோ பணமோ பெற்றுக்கொள்வார்கள். அவ்வாறு இருப்பவர்கள் இரவலர்கள்(பக்கீர்கள்) என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் துணைநிலையர்(கலிபாக்கள்) என்பவரின் தலைமையின் கீழ் பணியாற்றுவார்கள். அவ்வாறு துணைநிலையர்(கலிபாவின்) உத்தரவை மதிக்காதவர்களை அந்தக் கூட்டத்திலிருந்து விலக்கி விடுவார்கள். அவ்வாறு விலக்கப்பட்டவர்கள் நாகூரில் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்றுக்கொள்ளக்கூடாது என்ற தடை உள்ளது.
ஒக்கலிகக் காப்புக்கவுண்டர்
  தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பான்மையாக இச்சமூகத்தைச்சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். இவர்கள் தெரு என்ற அமைப்பில் உள்ளார்கள். ஒவ்வொரு தெருவிலும் சந்தா, மகிமை போன்றவை கட்டவேண்டும். அவ்வாறு கட்டாவிட்டால் அவர்கள் சாதியிலிருந்து நீக்கம் பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு அவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கு கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இதனால் பலர் ஊரைவிட்டு வெளியேறி நிகழ்வுகளும் உண்டு.
ஆதாரம்:போர்முரசு மாத இதழ், குமுதம் ரிப்போர்டர், மக்கள் தாரகை மாத இதழ்)
  இந்தியா விடுதலை அடைந்த பின்னரும் இன்றும் பல சமூகத்தில் ஊர்விலக்கம் மற்றும் சாதியிலிருந்து நீக்கல் உள்பட பல சமூக அவலங்கள் தொன்று தொட்டு நடைமறையில் உள்ளன. அரசு இதற்கென தனியாக ஆணையம் அமைத்து ஊர்விலக்கம் செய்பவர்களை கடுமையான சட்டங்கள் கொண்டு தடுத்து நிறுத்த முன்வரவேண்டும். இக்கட்டுரை, களஆய்வு, இதழ்கள், சுவரொட்டிகள் , பேட்டிகள் மூலமே எழுதப்பட்டுள்ளது.