தலைப்பு-சந்துரு-காணுரை : interview_chanthru_thanthit.v.

ஏழு தமிழர் விடுதலைக்கு எதிரான விண்ணப்பத்தை
உச்சநீதிமன்றம் உசாவச் (விசாரிக்க) சட்டத்தில் இடமில்லை!
நீதியரசர் சந்துரு நெற்றியடி!
இராசீவு கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் விடுதலை விவகாரம் மீண்டும்
ஊடக வெளிச்சத்தில்!
  இந்த ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது குறித்துக் கருத்துக் கேட்டு நடுவண் உள்துறைச் செயலருக்குத் தமிழ்நாட்டுத் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மடல் எழுதியிருக்கிறார். கவலைக்கிடமாகக் கிடக்கும் தந்தையைக் கடைசி முறை பார்க்கக் கூட நளினிக்கு ஒப்புதல் மறுத்த செயலலிதா அரசு, அது நடந்த அடுத்த ஓரிரு நாட்களுக்குள் இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யவே முயற்சி எடுக்கிறது எனச் சொன்னால் அதை நம்பும் அளவுக்கு இங்கு யாரும் விரல் சூப்பும் குழந்தைகள் இல்லை.
  அதே நேரம், இது பற்றி முடிவெடுக்கும் உரிமை தன் கையில் இருந்தபொழுதெல்லாம் முடிந்த அளவுக்கு இந்த விவகாரத்தைச் சிக்கலாக்கி ஏழு பேரின் உயிரையும் சட்டக் கயிற்றில் ஊசலாட விட்ட கருணாநிதி இன்று “மாநில அரசு இந்த விவகாரத்தைச் சரியாகக் கையாளவில்லை” எனப் பாடம் நடத்துகிறார். வை.கோ, இராமதாசு எனப் பலரும் இந்த நாடகங்களைக் கண்டித்து அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றனர். எது எப்படியோ, எல்லாத் தமிழ்நாட்டுக் கட்சிகளும் இந்தத் தமிழர்கள் எழுவர் விடுதலைக்காகவும் மீண்டும் ஒருமித்த குரலில் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. அந்த அளவில் இது தமிழ் மக்களுக்கு ஆறுதலான ஒன்றுதான்.
  ஆனால் இதற்கிடையில், ‘இராசீவு கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் விடுதலை தொடர்பான வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் நடுவண் அரசே நினைத்தாலும் இவர்களை விடுவிக்க முடியாது’ என யாருக்குமே தெரியாத அரிய சட்டப் பேருண்மையைப் படாத பாடுபட்டுக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார் வழக்குரைஞரும் பா.ச.க-வின் மாநிலத் துணைத் தலைவருமான வானதி சீனிவாசன் அவர்கள்.
  இஃது உண்மையா, உண்மையிலேயே சட்டம் இது பற்றி என்ன சொல்கிறது என்பதைப்பற்றி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது ஊடகங்களின் கடமையாகிறது.
  ஆகவே, முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசரும், நேர்மைக்கும் எளிமைக்கும் நீதியை நிலைநாட்டியதற்கும் பெயர் பெற்றவரும், பாதிக்கப்பட்டுள்ள இந்த ஏழு தமிழர்களின் விடுதலைக்காக வழக்குரைஞர் எனும் முறையில் முன்பே வாதாடியிருப்பவருமான நீதியரசர் சந்துரு அவர்கள் இவர்களின் விடுதலை தொடர்பாக வெளியிட்ட பல பயனுள்ள தகவல்களை இந்நேரத்தில் மீண்டும் மக்கள் பார்வைக்குக் கொண்டு வர விழைகிறேன்.
  கடந்த சனவரி மாதம், தந்தி தொலைக்காட்சியின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சியில் நீதியரசர் சந்துரு அவர்கள் அளித்த நேர்காணலில், “நடுவணரசு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததே தவறு! அப்படிச் செய்வதற்கே சட்டத்தில் இடமில்லை” என்று திகைப்புக்குரிய தகவலைக் கூறினார்.
  அப்படி அவர் சொன்னதும், “இராசீவு கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்து மூன்று நாட்களுக்குள் நடுவணரசு தன் கருத்தைத் தெரிவிக்காவிட்டால் தண்டனை அளிக்கப்பட்ட ஏழு பேரையும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் செயலலிதா அறிவித்தாரே? அதற்கு நடுவணரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும் என நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று மேற்கொண்டு அரங்கராசு பாண்டே எழுப்பிய கேள்விக்கு விடையளித்த நீதியரசர் சந்துரு அவர்கள்,
“நடுவண் அரசு தனக்கு அதில் மறுப்பு இருந்தால் எழுத்து வடிவில் தெரிவிக்க வேண்டும். அதையும் மீறி விடுதலை செய்தாலும் நடுவணரசு உயர்நீதிமன்றத்துக்குத்தான் செல்ல முடியுமே தவிர, உச்சநீதிமன்றத்துக்குப் போக வாய்ப்பே கிடையாது”
என்று அழுத்தந் திருத்தமாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,
“நடுவண் அரசே மாநில அரசுக்கு எதிராக அரசியல் சட்டத்தில் இல்லாத ஓர் உரிமையைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்து, அதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு ஐந்து நீதியரசர்கள் தீர்ப்பளிக்கிறார்கள் என்பது விந்தை!”
என்று உரைக்கும்படி குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட அந்தக் காணுரை கீழே:
ஆக, இது குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு நடுவண் அரசு போனதே சட்டப் புறம்பானது என்று நேர்மைக்குப் பெயர் பெற்ற, முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் ஏற்கெனவே கூறியிருக்கும் நிலையில், “வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுது விடுதலை செய்ய நடுவணரசே நினைத்தாலும் முடியாது” என்று வானதி சீனிவாசன் அறிக்கை விடுப்பது கற்றுக்குட்டி வழக்குரைஞர் ஒருவரின் முந்திரிக் கொட்டைத்தனமாகவே தென்படுகிறது.
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_e.bhu.gnanaprakasan