இராசேசு இலக்கானி - rajesh lakhani

தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் சைதி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல்  நாளை அதிகாரப்பூர்மாக அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் இராசேசு இலக்கானி தேர்தல் நடத்தைவிதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன எனக்கூறிப் பின்வருமாறு தெரிவித்தார்:
  • தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதுமே, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டன
*தேர்தல் பரப்புரை ஆற்றுவோர், வெவ்வேறு சாதி, சமயம், மொழி அல்லது சமுதாயத்தினருக்கு இடையே, இப்போதுள்ள கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்தும், ஒருவருக்கொருவர் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது
* வாக்குகளைப் பெற, சாதி அல்லது சமுதாய உணர்வுகளின் அடிப்படையில், வேண்டுகோள் விடுக்கக்கூடாது.
தேர்தல் பரப்புரைகளுக்கு மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது பிற வழிபாட்டு இடங்களைப் பயன்படுத்தக்கூடாது
*அரசியல் கட்சி அல்லது வேட்பாளர், தான் நடத்த திட்டமிட்டுள்ள கூட்டத்திற்கான இடம், நேரம் குறித்து, உள்ளூர் காவல்துறையினருக்கு முன்னரே தெரிவிக்க வேண்டும்
*கூட்டம் தொடர்பாக, ஒலிபெருக்கி வைத்தல் அல்லது வேறு வசதிகளுக்கான இசைவு அல்லது உரிமம் பெற, தொடர்புடைய அதிகாரியிடம் முன்னதாகவே விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ள வேண்டும்
*ஊர்வலம் தொடங்கும் நேரம், தொடங்கும் இடம், அது செல்லும் வழித்தடம், முடிவடையும் இடம், போன்ற விவரங்களை, முன்கூட்டியே காவல் துறைக்குத் தெரிவித்து, உரிய முன் இசைவுடன் நடத்த வேண்டும்
*கூட்டம், ஊர்வலம், பிற இசைவுகளைப் பெற, இணைய வழி(‘ஆன்லைன்’) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
சுவர் விளம்பரங்கள்:
*நகரப் பகுதிகளில், பொது இடங்களில் பொது மக்கள் பார்வையிடக்கூடிய இடங்களில், உரிமையாளரின் ஒப்புதல் பெற்றிருந்தாலும் கூட, சுவரில் எழுதுதல், சுவரொட்டிகளை ஒட்டுதல், போன்றவை எற்கப்பட மாட்டாது
*ஊரகப் பகுதிகளில், கட்டட உரிமையாளர் ஒப்புதலுடன், விளம்பரம் செய்யலாம். அவ்வாறு பெறப்பட்ட இசைவின் படிகளை, மூன்று நாட்களுக்குள், தேர்தல் அதிகாரியிடமோ அரசேற்பு வழங்கப்பட்ட அதிகாரியிடமோ, வேட்பாளர் அல்லது அரசியல் கட்சி, உரிய படிவத்தில் அளிக்க வேண்டும்.
விளம்பரக் கொடிகள், பேனர்கள் எதுவும் மற்றவர்களுக்கு இடையூறாக அமையக்கூடாது.
அரசு திட்டங்கள்:
*புதிய திட்டங்கள், சலுகைகள், நிதிச் சலுகைகள் எவ்வடிவிலும் வெளியிடுவது அல்லது, அது தொடர்பான உறுதிமொழிகள், அடிக்கல் நாட்டுதல் முதலான நிகழ்வுகள் தடை செய்யப்படுகின்றன
*இது, சட்டசபை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொள்ளும் பணிகளுக்கும் பொருந்தும்
*அரசு சாதனைகளை விளக்க, அரசு நிதியைப் பயன்படுத்தி, விளம்பரங்கள் வெளியிடுவது தடை செய்யப்படுகிறது
*அரசுக்குச் சொந்தமான ஓய்வு இல்லங்கள், பயணிகள் தங்குமிடங்கள் அல்லது அரசுக்கு சொந்தமான ஏனைய தங்குமிடங்களை, அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், எந்தவித பாகுபாடுமின்றி பயன்படுத்த இசைவளிக்க வேண்டும்
* தேர்தல் பரப்புரை செய்யும் நோக்கத்திற்காக, இதுபோன்ற தங்குமிடங்களை, அரசியல் கட்சியோ வேட்பாளரோ, பரப்புரை அலுவலகமாகவோ பொதுக்கூட்டம் நடத்தும் இடமாகவோ பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்