தலைப்பு-இன்னமும் இரவு விடியவில்லை-பேரறிவாளன் :thalaippu_iravuvidiyave_illai_perarivalan
தலைப்பு-பேரறிவாளன்,தொடரும்வலி : thalaippu_perarivaalan_kurippedu_thodarumvali

02

இன்னமும் அந்த இரவு விடியவே இல்லை!

பேரறிவாளன் குறிப்பேடு

– தொடரும் வலி!: பாகம் – 02

  மறுபிறவியில் சிறிதும் நம்பிக்கையற்ற நான் எல்லா உயிர்களுக்கும் வாழ்வு ஒரு முறைதான் என்ற கொள்கையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன். பேரறிவாளன் என்கிற மனிதன் பிறந்துவிட்டபின் அவன் ஒருநாள் மடிந்து சாகத்தான் போகிறான்.
  மீண்டும் ஒரு போதும் அவன் எந்த வடிவிலும் எழுந்து வரப்போவதே இல்லை. எல்லா மனிதர்களின் வாழ்வும் இப்படித்தான் தொடங்கி முடியப் போகிறது. அதில், மாற்றமில்லை.
அந்த மனித வாழ்வில் 20 அகவை முதல் 45  அகவை வரையிலான வாழ்வைத்தான் நாம் முதன்மைக்காலம்(Prime Period) என்று சொல்கிறோம். சிதைந்த காலக்கட்டம்-இளமை வாழ்வு சிறைக் கம்பிகளுக்குப் பின்னாலே கடந்து போய்விட்டது.
 அதேபோல்தான், இன்பமும் துன்பமும் கலந்ததுதான் மனித வாழ்வு என்போம். 25 ஆண்டுகளாகத் துன்பம் மட்டுமே நிறைந்ததாக வாழ்க்கை மாறிவிடுமா என்ன? எமக்கு அப்படித்தான் மாறிப்போனது. (இந்த இடத்தில் எமக்கு என்பதை எங்கள் எழுவர் என நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.)
  ஒற்றை நாளில் எதிர்கால வாழ்வையே புரட்டிப்போட்ட அந்த நாள்  – வைகாசி 28, 2022 / 1991-ம் ஆண்டு  சூன் 11  இரவு 10.30 மணி அளவில் எனது வாழ்வைத் தலைகீழாகப் புரட்டிப்போட்ட அன்றைய நிகழ்வுக்குக் காரணமான பின்னணி – குறித்தும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
 ஓர் எளிய பள்ளி உடற்கல்வி ஆசிரியரான தந்தைக்கும் எந்தப் பெரிய உலகப் பட்டறிவும் அறிந்திராத தாயாருக்கும் மகனாகப் பிறந்த எனக்கு எனது பெற்றோரால் சொல்லித் தரப்பட்ட உயர்ந்த வாழ்க்கைத் தத்துவம் எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
  ‘‘நாணயமும் ஒழுக்கமும் நிறைந்த மனிதம்’’. அதன் நீட்சியாகத்தான் தமிழகத்தின் அன்றைய உணர்வுகளின் வெளிப்பாடாக எல்லாரையும் போல் ஈழ விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர் எனது பெற்றோர். அந்த உணர்வோடுதான் நானும் வளர்ந்தேன். அன்றைய  நூறாயிரக்கணக்கான  இளைஞர்களிடையே இருந்த அதே உணர்வுதான் என்னிலும் இருந்தது.
  ஈழத்தில் 1983  சூலைக் கலவரத்தை ஒட்டித் தமிழகத்தில் நடந்த மாணவர்கள், ஆசிரியர்கள் கூட்டுப் போராட்டத்தின் எதிரொலியாக எங்களது ஊர் பள்ளிகளின் சார்பில் பேரணிகள் நடந்தன. 12  அகவை மாணவனாக நானும் அதில் பங்கேற்றேன்.
  இந்த நேரத்தில் எனது குடும்பத்தின் கொள்கைப் பின்னணி குறித்தும் கூறிவிடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். எனது தந்தை வழிப் பாட்டன் கே.கே.தங்கவேல், தந்தை பெரியாரின்  தன்மதிப்புக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு எங்கள் ஊர்ப்கபகுதியின் தளபதியாகத் திகழ்ந்தார். தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அந்தக் கொள்கை வழியே வளர்த்தார்.
  எனவே, எனது தந்தை – அவர் வழியே நானும் தமிழர் வரலாற்றைப் புரட்டிப்போட்ட அந்தக் கிழவரின் கொள்கை வழியே வளர்ந்ததில் வியப்பு ஏதுமில்லை. சாதி ஒழிப்பு, சமூக நீதி, பெண்ணுரிமை, கடவுள் மறுப்பு, மனிதநேயம் என மக்களின் துன்பங்களைக் களையும் தூயச் சிந்தனைகளுடன் தொடங்கிய எனது வாழ்க்கைப் பயணம் என்னை நானே காத்துக்கொள்ளவும், எனது விடுதலை குறித்துச் சிந்திக்கவும், செயல்படவுமான இழிநிலையை எட்டும் என ஒரு நாளும் நான் கற்பனை செய்ததில்லை.
  இந்தக் கோணத்தில் எனது தற்போதைய வாழ்வின் போக்கைப் பொருத்திப் பார்க்கிறபோதெல்லாம் உயிர் அறுக்கும் வேதனையை அடைந்து இருக்கிறேன். என்றாலும் – மனிதநேயத்தோடு பிறருக்கு உதவுவதால் – அது  நேர்ச்சியில்(விபத்தில்) காயம் பட்டவரை காப்பாற்றுவதாக இருந்தாலும் அல்லது விடுதலைப் போராட்டத்தில் காயமடைந்தவரைக் காப்பதாக இருப்பினும் – இறுதியில் அதன் விளைவு துன்பமும் மரணமும்தான் என முடிவாகிப் போகும் என்பதற்கு நான் எடுத்துக்காட்டாக மாறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
  அப்படியான நான் 1989-ஆம் ஆண்டு எனது பட்டயப் படிப்பை கிருட்டிணகிரி அரசு  பல்தொழில்நுட்பப்பயிலகத்தில்(பாலிடெக்னிக்கில்) முடித்த பின்பு படிப்புக்குரிய தொழில் செய்துகொண்டே மேலே ஏதேனும் படிக்க வேண்டும் என ஆர்வத்துடன் சென்னை சென்றேன்.
  அங்கு எனக்குச் சிறிய  அகவை முதல் தெரிந்த ஒரே இடம் வேப்பேரி ‘பெரியார் திடல்’. அங்கு அறிமுகம் ஆனவர்தான் ‘சுபா  செய்திப்படநிலையப்பணியக ‘ உரிமையாளர் அண்ணன் சுபா சுந்தரம்.
 இராயப்பேட்டையில் இருந்த அவரது கடையில்தான் நளினியின் தம்பி பாக்கியநாதனும், தற்போதும் உயிரோடு இருப்பதாக ஆதாரங்களோடு பரப்பரப்பாகப் பேசப்படும் அரிபாபுவும் நண்பர்களாயினர்.
  வைகாசி 07, 2022 /21-05-1991 அன்று திருப்பெரும்புதூரில் நிகழ்ந்து விட்ட குண்டுவெடிப்பின் அதே இரவு நேரம் நண்பர் பாக்கியநாதனுடன் தேவி திரையரங்கில் இரவுக் காட்சியாக ‘பவுனு பவுனுதான்’ திரைப்படம் பார்த்துக்கொண்டி ருந்ததை இன்றும் என்னால் அசைபோட்டுப் பார்க்க முடிகிறது.
 படம் முடிந்து திரும்பும் வழியில்தான்  இராசீவு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டநிகழ்வு குறித்து இருவரும் அறிந்தோம். அன்று எல்லோரையும்போல் செய்தியாக மட்டுமே அறிந்த நாங்களும் அந்த நிகழ்வில் பிணைக்கப்பட்டுச் செய்தியாகப் போகிறோம் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்கவில்லை.
  23-05-1991 அன்று நானும் பாக்கியநாதனும் இணைந்து அவரது தமக்கை வேலை செய்துவந்த அடையாறு அனவாண்டு நிறுவனம் சென்றோம். நான் அலுவலகத்தின் வெளியே இரு சக்கர வாகனத்தில் காத்திருக்க, அவர் மட்டும் சென்று தனது தமக்கையைச் சந்தித்துவிட்டுத் திரும்பினார். அப்போது, அவர் தமக்கை கூறிய தகவல்களைக் கேட்டறிந்து பதற்றத்தோடு என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
  அப்படித்தான் சிறிதேனும் எனக்கு அந்த நிகழ்ச்சி குறித்துத் தெரியவந்தது. அதன் வீரியம் உணர்ந்த எவருமே அதனைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளத் தயங்குவார்கள், அஞ்சுவார்கள் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  அந்தச் சிறிய பருவத்தில் நானும் அப்படியே இருந்தேன். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இருந்த ஈழ ஆதரவாளர்கள் பலரையும்   ம.பு.பி (சி.பி.ஐ.) – காவல் துறை விசாரணை செய்துவந்தது. அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் சோலையார் பேட்டையில் உள்ள எனது பெற்றோரிடமும் விசாரித்தனர். பின்னர் என்னைப் பற்றியும் விசாரித்தனர்.
  அதனால், அவர்களுடன் நேரில் சென்னைவந்த என் பெற்றோர் பெரியார் திடலில்வைத்து  சூன் மாதம் 11 இரவு 10.30 மணியளவில் விசாரணைக்கு என என்னை அனுப்பிவைத்தனர். சட்டப்படியான விசாரணைக்கு ஒத்துழைப்பது தமது கடமை என எனது பெற்றோர் கருதியதாலும் குற்றமேதும் செய்யாத காரணத்தாலும் அச்சமின்றி நானும் அவர்களுடன் செல்ல முடிவெடுத்தேன்.
  அன்று அவர்கள் கேட்ட கேள்வியும், கூறிய தகவலும் ஒன்றே ஒன்றுதான், ‘‘நளினி, முருகன் எங்கு உள்ளனர் என்ற ஒற்றைக் கேள்விக்கு விடை தெரிய வேண்டும். இதுகுறித்து விசாரித்துவிட்டு காலை உங்கள் மகனை அனுப்பிவிடுகிறோம்” என்று வாக்குறுதி அளித்துவிட்டு எனது பெற்றோரிடமிருந்து ‘மல்லிகை’க்கு அழைத்து வந்தனர்.
  எனக்கு விடை தெரியாத அந்த ஒற்றைக் கேள்விக்கு என்னவோ, அடுத்தநாளே விடை கிடைத்துவிட்டது. நளினி, முருகன் இருவருமே 12-06-1991 அன்று சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் கைதுசெய்யப்பட்டனர்.
  ஆனால், ‘‘அடுத்தநாள் காலை அனுப்பி விடுகிறோம்’’ என எனது பெற்றோருக்கு அவர்கள் தந்த உறுதி மட்டும் இன்னமும் தீர்க்கப்படாத 25 ஆண்டுகால வலியாகிப் போனது.
இன்னமும் அந்த இரவு விடியவே இல்லை!
(வலிகள் தொடரும்)
பேரறிவாளன்
முத்திரை-இளையவிகடன்,சூனியர்விகடன் :muthirai_juniorvikadan