அகநி வெளியீட்டகம் -இலயா அறக்கட்டளை சார்பாக

குழந்தைகளுக்கான எளிய வாசிப்பு நூல்கள் வழங்கும் விழா

   அகநி வெளியீட்டகம்-இலயா அறக்கட்டளை சார்பாகக் குழந்தைகளுக்கான எளிய வாசிப்பு நூல்கள் வழங்கும் விழா வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு  ஊரிலுள்ள பாரதி சமூக – கல்வி ஆய்வு மையத்தில்  ஆனி 12, 2047 சூன் 26, 2016 அன்று நடைபெற்றது.
   இந்நிகழ்விற்கு இராமலிங்கம் குழும உரிமையாளர் இரா.சிவக்குமார்  தலைமையேற்றார். கொடுங்காளூர் மா.குமரன் அனைவரையும் வரவேற்றார்.
     நிகழ்வில், வந்தவாசி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அன்சாரி, நூலகர் கு.இரா.பழனி,  இலயா அறக்கட்டளைச் செயலாளர் மா. யுவராசு, ஆகியோர்  முன்னிலை வகித்தனர். கவிஞர் மு.முருகேசு வாழ்த்துரை வழங்கினார்.
        சிற்றூர்ப்புறக் குழந்தைகளுக்கான எளிய வாசிப்பு நூல்களை வந்தவாசிச் சட்டமன்ற உறுப்பினர் எசு. அம்பேத்குமார் வழங்கிச் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “நான் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற பிறகு கலந்து கொள்கிற முதல் நிகழ்ச்சி.  சிற்றூர்ப்புறக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கான ஒரு நிகழ்ச்சியாக  இஃது அமைந்திருப்பதில் உளமார மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்குப் பெற்றோர்கள் அனைவரும் எப்பாடுபட்டாவது தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
        சிற்றூரில் நன்றாகப் படிக்கிற குழந்தைகள் பெரிய நிறுவனங்களில் நேர்காணல்களுக்குச் செல்லும்போது அச்சமும் தயக்கமும் கொள்கிறார்கள். ஆங்கிலம் தெரியாது என்கிற பயமே அவர்களைப் பேச விடாமல் செய்கிறது. இதற்காகப் பெரிய நிறுவனங்களில் நேர்காணல்களுக்குச் செல்பவர்களுக்குத் தயக்கத்தைப் போக்கும் வகையில் பயிற்சி அளிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள இருக்கிறேன். அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வரவேண்டும். அரசுப் பள்ளியில் படித்தாலும் நல்ல மதிப்பெண் பெற முடியும், உயர் பதவிகளுக்குச் செல்ல முடியும் என்பது இன்றைக்கு  நடைமுறையாகி வருகிறது. வந்தவாசித் தொகுதியின் கல்வி வளர்ச்சிக்காக என்னாலான பணிகளை நான் தொடர்ந்து செய்வேன்” என்றார்.
      சிற்றூர்ப்புற ஆசிரியர்களுக்கான பயிற்சியை மாநிலக் கருத்தாளர்கள் சங்கர், பரமேசுவரி ஆகியோர் அளித்தனர்.
         நிறைவாகத், தேசூர் மு.சீவா நன்றி கூற, நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

[படங்களை அழுத்தின் பெரியஅளவில்காணலாம்.]