பதாகை-அரசியல் கைதிகளை உடனே விடதலை செய் ; banner_arasiyalkaithikal_viduthalai
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில்
தமிழ்க் கூட்டமைப்பின் அலட்சியப் போக்கு: குற்றச்சாட்டு

  தமிழ் மக்களின்  சார்பாளர்களான தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பினர், அரசியல் கைதிகளை விடுப்பதில் வலுவான எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமை குறித்துக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
   பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்க் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாகச் சிறையில் வாடும் 160 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பு இன்று கொழும்பில்  தொடங்கிய கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கையின் போதே  இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்க் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாகச் சிறையில் வாடும் 160 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று கொழும்பில் கையெழுத்துப்பெறும் போராட்டமொன்று தொடங்கியது.
 பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, பொது அமைப்புக்களின்  சார்பாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமயத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்ட கையெழுத்துத் திரட்டும் போராட்டத்தைத் தொடங்கி வைத்த அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் அரசியல் கைதிகளின்  சிக்கல் ஒரு தேசியச் சிக்கல் எனக் குறிப்பிட்டார்.
  இந்த நிகழ்வில் கலந்துகொண்ட  சாதிக்க பலய என்ற அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வட்டரக்க விசித்த தேரர் அரசியல் கைதிகள்  தொடர்பில் பாராமுகத்துடன்  குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன இருப்பதாகக் கடும் கண்டனம் வெளியிட்டார்.
  இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த வட்டரக்க விசித்த தேரர்,  “நான்  குடியரசுத்தலைவரானால் அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வேன், ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும், இராணுவத்தினர் வசமுள்ள அனைத்துப் பொதுமக்களின் காணிகளும் விடுவிக்கப்படும். இனவாதம் பேசும் அனைத்துப் பிரிவினைவாதிகளுக்கும் இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்படும். நான்  குடியரசுத்தலைவரானால் இவற்றைச் செய்வேன் என நான் கூறுவதாக நீங்கள் நினைக்கக்கூடும், அது அவ்வாறல்ல மைத்திரிபால சிறிசேன  குடியரசுத்தலைவரானால் தாம் செய்வதாக அளித்த வாக்குறுதிகளே இவை” என்றார்.
  எனவேதான், இவற்றைச் செய்யுமாறு வலியுறுத்திப் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் செய்ய வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். தனது  அலுவல்முறை இணையத்தளத்தை ஊடுறுவிய சிறுவனைத் தான் ஒரு தந்தையின் நிலையில் இருந்து பார்ப்பதாகக் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்,
  அதுபோல்தான் நீண்டகாலமாகச் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் தாய், தந்தையர்களும் தமது பிள்ளைகளுக்காக பல ஆண்டுகளாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு அவர்கள் தொடர்பிலும் சிந்திக்குமாறு  குடியரசுத்தலைவரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
  அனைவரும் தனது பிள்ளைகள் எனக் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டுள்ளார். சிறைக்கைதிகளையும் அவ்வாறு நினைக்க முடியாதா? நிசங்க சேனாதிபதி கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின; எனினும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக விடிந்ததும் செய்தி ஒன்று வெளியாகியது.
இது புதுமையான  செய்தியல்லவா? கோடிக்கணக்கில் கொள்ளையிட்டவர்கள் வெளியில்  உரிமையுடன் உலவும் உள்ள நிலையில், ஒரு தொலைபேசி அழைப்பு வந்தமைக்காகச் சிறிய குற்றச்சாட்டுக்களுக்காகக் கைதானவர்கள் பல வருடங்களாகச் சிறையில் வாடுவது நியாயமாகுமா?
 இது மிகப்பெரிய மனித உரிமை மீறல். இனவாதிகளை – பிரிவினைவாதிகளைச் சிறையில் அடைக்க வேண்டும் அதுவே நல்லிணக்கம். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அந்தக் கடமையை நிறைவேற்ற குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுப்பாரென நான் நம்புகின்றேன் என்று தெரிவித்தார்.
  இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் அரசியல் கைதிகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாகிய வண்ணம் அவர்களுக்காக நீண்டகாலமாக குரல்கொடுத்துவரும்  மூத்த வழக்குரைஞர் கே.எசு. இரத்தினவேல், தமிழ் மக்களின்  சார்பாளர்களாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், அரசியல் கைதிகளை விடுவிப்பதில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை கவலை தெரிவித்துள்ளார்.
  அவர் மேலும் குறிப்பிடுகையில், ” கடந்த பெப்பிரவரி மாதம் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாத காரணத்தால் குறித்த ஒரு அரசியல் கைதியின் வழக்கு எட்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பெப்பிரவரிக்கு பின்னர் ஓட்டோபர்  மாதத்திலேயே குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. வருடத்தில் இரண்டு  நாள்கள் மாத்திரமே வழங்கப்படுகின்றன. அதே வழக்கில் ஐந்து ஆறு பேர் உள்ளனர். ஒவ்வொருவரின் வழக்குகளுக்கும் 3 தொடக்கம் நான்கு ஆண்டுகள் வரை எடுக்கின்றது. சற்று சிந்தியுங்கள். அவ்வாறு எனின் வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுதற்கு 15 ஆண்டுகள் எடுக்கும். நியாயத்தின் அடிப்படையில் இந்த வழக்குகளுக்கு அரசியல்  முறையிலான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். அங்கு  பெருங் குற்றங்கள் எதுவும் இல்லை. வாக்குமூலம் மாத்திரமே உள்ளன. வாக்குமூலம் சாதரணமான வழக்குகளில் சாதாரண சட்டங்களின் பிரகாரம் வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆகவே இந்த வழக்குகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். தீயூழாக வடக்கு மற்றும் கிழக்கில் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதிகள் மக்களின் விரும்பங்களை  எதிரொலிக்கும் வகையில் செயற்படவில்லை. தமிழ் மக்களிடம் இருந்து வெகுதொலைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.
  அரசியல் கைதிகளை விடுவிப்பதில் அவர்கள் புரட்சி செய்யவில்லை. அவர்கள் தமது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. ஆகவே அரசியல் கைதிகளின் விடுதலை என்பது  குடிமை, மன்பதை, நியாயம் தொடர்பில் சிந்திக்கும் மக்களைப் பொருத்ததாக உள்ளது. இந்த அரசியல் கைதிகள் எந்தவொரு முன்நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என மக்கள் கோரவில்லை. எந்தவொரு முன்நிபந்தனையும் இன்றி அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம் என்றார்.