அழுகிப்போன இலங்கைக்குப் புனுகுபூசும் இராம்!/

 ‘இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பன்னாட்டுப் பங்களிப்புடன் கூடிய நடுநிலையான  உசாவல் நடத்தப்பட வேண்டும்’ –  என்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசின்  இசைவுடனேயே, ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றுவரை, அப்படி ஓர் உசாவல் நடக்கக்கூடும் என்பதற்கான அறிகுறி கூட இல்லை.
  சிங்களப் படையினரின் கொலைவெறியும் காமவெறியும் தொடர்ந்து அம்பலமாகிவந்த நிலையில்,  பன்னாட்டு அளவில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஏற்பட்ட நெருக்கடியை நீர்த்துப்போக வைப்பதற்காகவே, அந்தத் தீர்மானத்தைத் தானும் ஆதரிப்பதாக ஒரு நயவஞ்சக நாடகத்தை அரங்கேற்றியது இலங்கை. இன்றுவரை, தீர்மானத்தின் ஒரே ஒரு சொல்லைக்கூட அது நிறைவேற்றவில்லை; நிறைவேற்றப்போவதுமில்லை.
  நடப்பது நாடகமென்று தெரிந்தேயிருந்தும் அதற்காக  இலங்கையைப் பாராட்டிய அறிவுக் கொழுந்து, நம்மூர்  ஃகிந்து.  அன்று, அந்தத் திட்டமிட்ட நயவஞ்சக நாடகத்துக்காக இலங்கையைப் பாராட்டிய அதே  ஃகிந்து, அந்த நாடகத்தின் மூலம்  அனைத்துநாடுகளின் முகத்தில் இலங்கை கரிபூசிய  திறமையை நினைத்து நினைத்து நெகிழ்ந்துபோகிறது இன்றுவரை! மேகலை கழன்று கீழே விழாதது ஒன்றுதான் பாக்கி!
  “போர்க்குற்றங்கள் தொடர்பாகப் பன்னாடுகள் விடுக்கும் கோரிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றனவா, அல்லது மௌனமாக்கப்பட்டுவிட்டனவா?” என்று இலங்கைத்தலைமையர் இரணில் விக்கிரமசிங்கவிடம் பெருமிதத்தோடு ஃகிந்து  கேட்டிருக்கிறது.  (As for the International demands – for an Investigation into war crimes – they have been moderated or have quietened down?)
  [சென்றவாரம் ஆங்கில   ஃகிந்துவில் வெளியான இரணில் செவ்வி(பேட்டி)  கேள்வியையும், தமிழ்  இந்துவில் அது தமிழில் வெளியாகியிருப்பதையும் அப்படியே கொடுத்திருக்கிறேன்.]
  “போர்க்குற்றங்கள் மீதான  உசாவலை வலியுறுத்திப் பன்னாடுகள் கொடுத்த அழுத்தம் குறைந்திருக்கிறதா, கைவிடப்பட்டு விட்டதா?” – சுற்றி வளைக்காமல் தெளிவாகச் சொல்லவேண்டுமெனில், இதுதான்  ஃகிந்துவின் கேள்வி.
  “ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்துக்கு நாங்கள் ஒத்துழைப்பாக இருந்திருக்கிறோம். அதில் பெரிய அளவிலான  சிக்கல் இருப்பதாக நான் நினைக்கவில்லை” – இது  இரணில் விக்கிரமசிங்கவின் சுருக்கமான மழுப்பலான  விடை.
  இரணிலின்  மறுமொழியை விரிவுபடுத்திப் பார்க்க வேண்டியது  இன்றிமையாதது.
  ‘போர்க்குற்ற  உசாவலுக்குப் பன்னாட்டுப் பங்களிப்புடன் கூடிய   உசாவல் தேவை – என்கிற தீர்மானத்தை நாங்களும் சேர்ந்தே கொண்டுவந்தோம். அனைத்து நாடுகளுக்குக் கொடுத்த அந்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டாலும்,  அது ஒரு  சிக்கலாக இருக்குமென்று நான் நினைக்கவில்லை’ -இரணிலின் மறுமொழிக்கு இதுதான் நேரடி  பொருள்.
 இரணிலிடம் ஃகிந்து கேட்டிருக்கும் முப்பது கேள்விகளில், இந்த ஒரே கேள்விதான் போர்க்குற்ற  உசாவல் தொடர்பானது. அதுவும் இரண்டே வரிக் கேள்வி. அதுவும் இரத்தினச் சுருக்கமாக  முடிந்துவிடுகிறது.  அதற்குக் காரணம்,  ஃகிந்துவின் சார்பில் கேள்வி கேட்டிருப்பவர் – ‘சிரீலங்காவுக்குச் செய்த அளப்பரிய தொண்டுக்காகவே’  இலங்கா இரத்ன விருது பெற்ற திருவாளர் என். இராம். அவரது அந்தத் தொண்டு இன்னும் முடிவடைந்துவிடவில்லை போலிருக்கிறது.
  இரத்தினச்சுருக்கமாகக் கேள்வி எழுப்ப என்.இராம் என்ன திருவள்ளுவரா? மைலாப்பூரிலேயே படித்திருந்தாலும் கூட, அப்படி ஆகிவிட வாய்ப்பேயில்லை. திருவள்ளுவர் கையிலிருந்த எழுத்தாணி, நேர்மையானது, நடுநிலையானது. இராமின் கேள்வியிலிருக்கிற ஒவ்வொரு  சொல்லிலும்  நஞ்சு வைக்கப்பட்டிருக்கிறது. தமிழனை மடியில் படுக்கவைத்துத், தமிழிலும் ஆங்கிலத்திலும் மாற்றிமாற்றி அதை ஊட்டுகிறது – ஃகிந்து.
  26 ஆவது  கல்லில் 150,000 தமிழர்கள் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விமானங்கள் மூலம் அந்த அப்பாவி மக்கள் மீது குண்டுமாரி பொழிந்திருக்கிறது இலங்கை.  அனைத்துநாடுகள் என்கிற சடத்தைப் பற்றிக் கவலையேபடாமல், எரிம(பாசுபரசு)க் குண்டுகளையும் கொத்துக் குண்டுகளையும் பயன்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டமிட்ட இனப்படுகொலையை ‘இனப்படுகொலை’ என்று குறிப்பிடக்கூட மனம் வரவில்லை – இராம் போன்ற மேதாவிகளுக்கு! ‘போர்க்குற்றம்’ என்கிற போலிச் சொல்லால், அழுகிப்போன இலங்கையின் பின்பக்கத்துக்குப் புனுகு பூசிக் கொண்டிருக்கிறார்கள்.
  திருவாளர்  இராம்,  எளிய செய்தியாளரல்ல!  இதழுலக வல்லமையாளர்களில் (சாம்பவான்களில்) ஒருவர். ‘ பன்னாடுகள் ஒரு  சிக்கலாக இருக்குமென்று நான் நினைக்கவில்லை’ என்று இரணில் விக்கிரமசிங்க சொன்னதும், “அனைத்து நாடுகளுக்குக் கொடுத்த வாக்குறுதியை ‘நீங்கள்’ மறந்துவிட்டமாதிரி  அனைத்துநாடுகளும் மறந்துவிட்டன என்று சொல்கிறீர்களா” என்று திருப்பிக் கேட்டிருக்க வேண்டாவா? இதைக்கூடப் பட்டென்று கேட்கத் தெரியாத ஒருவர், இவ்வளவு மெனக்கெட்டு கொழும்புக்கே போய் இப்படியொரு பேட்டி எடுத்திருப்பது எதற்காக, யாருக்காக?
  சிங்களப் படையின் பாலியல் வன்முறைகளையும் கொலைவெறியையும்  அலைவரிசை நான்கின் கல்லம் மேக்ரே மாதிரி  ஃகிந்து  இராம்  அம்பலப்படுத்த வேண்டா!
  முள்ளிவாய்க்கால்வரை கொன்று புதைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அவர் நயன்மை(நியாயம்) கேட்கவேண்டா!
  நடந்த இனப்படுகொலையை மூடிமறைக்கிற கயமைத்தனத்தை இந்த அளவுடன்  இராம் நிறுத்திக் கொண்டால் போதும்.
  சொந்தத் தாயகத்துக்கு விடுதலை கேட்ட ஒரே குற்றத்துக்காக விலங்குகளைப் போல வேட்டையாடப்பட்ட எமது மக்களுக்குச் செய்கிற தொடர்  வஞ்சகத்திற்கு(துரோகத்துக்கு) முற்றுப்புள்ளி வைத்தால் போதும்!
 இலங்காஇரத்னா விருதுக்கான விலையாகத்  தனது  தன்மதிப்பு, மனச்சான்று, தொழிற்பண்பு – என்று, தனக்குச் சொந்தமான எதை வேண்டுமானாலும் இலங்கைக்கு  இராம்  ஒப்படைக்கலாம். தன்னுடைய உடல் பொருள் ஆவி அத்தனையையும் எழுதிக் கொடுக்கலாம். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. வாங்கிய விருதுக்கு விலையாக, எம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியையும் நியாயத்தையும் குழிதோண்டிப் புதைக்க, உண்மைகளை மூடிமறைக்க  ஃகிந்து  இராம் யார்?
  நிருபயா என்கிற  தில்லித் தங்கைக்கு நேர்ந்த கொடுமையைக்  கண்டு நாடே கொதித்தெழுந்த போது, தாங்களும் கொதிப்பதாகத்தானே  காட்டிக்கொண்டார்கள்  ஃகிந்துவும் இராமும்..
 நிருபயாவுக்கு நிகழ்ந்த கொடுமைக்கும், இசைப்பிரியா என்கிற எங்கள் தமிழ்த் தங்கைக்கு நேர்ந்த கொடுமைக்கும் என்ன வேறுபாட்டைக் கண்டார்கள் இவர்கள்?
 நிருபயாவைச் சீரழித்தவர்கள் பொறுக்கிகள் என்றால், இசைப்பிரியாவைச் சீரழித்தவர்கள் சிங்களப்படைப் பொறுக்கிகள். இதைத்தவிர வேறென்ன  வேறுபாடு?
  எங்கள் இசைப்பிரியாவுக்கு நீதிகேட்பதில், கல்லம் மேக்ரே என்கிற பிரித்தானிய இதழாளனுக்கு (பத்திரிகையாளனுக்கு) இருக்கிற உறுதிகூட இவர்களுக்கு இல்லையே….. ஏன்?
  உதவி செய்யாவிட்டாலும்  ஊறு செய்வோம் – என்று இவர்கள் கூசாமல் பேசுவதால்தான் இவ்வளவையும் கேட்க வேண்டியிருக்கிறது.
  1987 இலேயே பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்ட செய்தியை  மகிழ்ச்சி பொங்க வெளியிட்டது  ஃகிந்து. .அஃது  இதழியல் அறமோ இல்லையோ… அவர்களது  ஃகிந்து  அறம்.
அதைக் குறித்து நாம் கேள்வி கேட்கவில்லை.
ஆனால், பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் என்பது தெரிந்த பிறகு,   அப்படியொரு பொய்ச் செய்தியை வெளியிட்டமைக்காக,  ஃகிந்து என்கிற  பரம்பரைமிக்க நாளேடு ஒரு சொல் – மன்னிப்பு – கேட்டிருக்கவேண்டாவா? தெரியாமல் போட்டுவிட்டோம் – என்றோ,  அரிகரன் சொன்னதை நம்பிப் போட்டுவிட்டோம் – என்றோ எழுதி வருத்தம் தெரிவித்திருக்க வேண்டாமா?
  நாங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதுவோம், அது பொய்யென்பது தெரிந்தபிறகு மன்னிப்பெல்லாம்   கேட்கமாட்டோம், வருத்தம் கூடத் தெரிவிக்க மாட்டோம் – என்கிற ஒரு செய்தித்தாளின் மனநிலை, அதன் வாசகர்களுக்கு அது  இழைக்கிற பச்சைஇரண்டகம். வேறெந்தப் பெயரில் அதை அழைப்பது?
  இந்தப் பச்சை இரண்டகத்தை ஃகிந்துவும் இராமும் இன்றுவரை தொடர்கின்றனர் என்பதற்கான வலுவான ஆதாரம்,  இரணில்  செவ்வி.
  ஒரு பேச்சுக்கு, இனப்படுகொலையைப் போர்க்குற்றமென்றே வைத்துக்கொள்வோம். அதைப்பற்றி  உசாவப் பன்னாடுகளின் பங்களிப்போடு கூடிய நடுநிலையான  உசாவல் – என்பதுதானே  செனிவா தீர்மானம். அதைத்தானே ஆதரித்தது இலங்கை. ‘எங்கள் ஒத்துழைப்புடன்தான் அது கொண்டுவரப்பட்டது’ என்று  இரணில் குறிப்பிடுவது அதைத்தானே! அப்போது, ‘இலங்கையின் இந்தத் துணிவான முடிவு வரவேற்கத்தக்கது’ என்று பாராட்டியவர்கள், அந்தத் தீர்மானத்தைக் குப்பைக்கூடையில் எறிந்திருக்கும் இலங்கையின் நம்பிக்கை  இரண்டகத்தைக் கண்டிக்க வேண்டுமா வேண்டாமா?
  அதைச் செய்யாமல், ‘இவ்வளவு  திறமையாக அனைத்துநாடுகளை ஊமையாக்கினீர்களே,  எப்படி’ என்று  இரணிலையும் மைத்திரிபாலாவையும் பார்த்துக் காதலாகிக் கசிவது என்ன  அறம்?
  ஒட்டுமொத்த செவ்வியில் பன்னாட்டு உசாவல் தொடர்பான ஒரே ஒரு கேள்விக்கும் இரணில் மழுப்பலாக விடையளித்திருக்கும்  நிலையில்,  அதற்கு விளக்கம் கேட்காதது,  இதழியல் அதருமம்.  இராம் தவிர வேறு யாரேனும்  இரணிலைச் செவ்வி கண்டிருந்தால்,  அறிவுக்கூர்மையின்மையால் அந்த வாய்ப்பைத் தவற விட்டிருக்கக் கூடும் என்று நினைத்துத் தொலைத்திருக்கலாம். இராம் அறிவாளி. அறிவுக் கூர்மையில்லாதவர்களைக் காட்டிலும், நேர்மையற்ற அறிவாளிகளே ஆபத்தானவர்கள் என்கிற காந்தியப்  பார்வையுடனேயே திருவாளர்  இராமைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
  இரணிலை  இலங்காரத்ன  இராம் செவ்வி(பேட்டி)யெடுத்திருக்கிற காலப்பகுதி, ஐந்தாறு ஆண்டுகளாக இலங்கையையே உலுக்கிக் கொண்டிருக்கிற இரண்டு இதழாளர்களின் படுகொலைகள் தொடர்பில் நிறைய உண்மைகள் வெளியாகிக் கொண்டிருக்கிற காலப்பகுதி. அந்த இருவரின் படுகொலைகளில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற அதிபர் மைத்திரிபாலா தமது அதிகாரத்தைத்  தவறாகப் பயன்படுத்துகிற காலப்பகுதி. ஒருவர் –  இலசந்த விக்கிரமதுங்கன்(Lasantha Wickramatunga). இன்னொருவர் – பிரகீத்து ஏக்னலிகோடன்(Prageeth Eknaligoda).
  தமிழ்நாட்டைச் சேர்ந்த  இராம்போல  இல்லாமல், சிங்களவர்களான  இலசந்தவும் பிரகீத்தும் தமிழினப்படுகொலையைக் கண்டித்தவர்கள்;  இராசபக்சவைத் தட்டிக் கேட்டவர்கள். உண்மை பேசியதற்காகக் கொல்லப்பட்ட அந்த  உடன் இதழாளர்கள் குறித்தாவது  இராம் கேட்டாரா என்றால், இல்லை. ஒரே ஒரு  சொல் கூட அதைப்பற்றிக் கேட்கவில்லை.
  இனப்படுகொலைக்கான  பன்னாட்டு உசாவல் குறித்த கேள்வியைப் பூசி மெழுகிக் கேட்டது இராம் செய்த இனத்துரோகம் என்றால்,  இலசந்த குறித்தும் பிரகீத்து குறித்தும் கேட்கவே கேட்காதது தான் செய்கிற  இதழியல் தொழிலுக்கு அவர் செய்திருக்கிற மன்னிக்க முடியாத  வஞ்சகம்!
  இராமுக்கு இதெல்லாம் புதிதல்ல! ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த இரத்தக் கறையோடு நின்றிருந்த மகிந்த  இராசபக்சவை புத்தனாகவே காட்ட, ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்  ஃகிந்து வெளியிட்ட ‘மகிந்த  சஃசுட்டி’ இப்போதும் நினைவிருக்கிறது எனக்கு! (இராம் எடுத்த அந்தச் செவ்வி சஃசுட்டிக்கவசம்  மாதிரிதான் இருந்தது.)
  உடல்திமிரெடுத்த பொலிகாளையைப் போல் “எங்கள் நாட்டுக்குக் கலப்பினம்தான் பொருத்தமானது” என்று மகிந்தன் சொல்ல, அதை  ஒரு  சொல் கண்டிக்காமல்  களித்துக் கொண்டிருந்த அதே  இராம்தான்,  “பன்னாடுகளுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் குப்பையில் போடுவதெல்லாம் ஒரு  சிக்கலே இல்லை” என்று இரணில் பேசுவதை ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டு வந்து  ஃகிந்துவில்  குப்பை கொட்டுகிறார்.
  பாரதி சாடியதைப் போல், ஈரத்திலேயே உழல்கிற தமிழனுக்கு இஃது உறைக்கப் போவதில்லை. தமிழனுக்கு இதெல்லாம் உறைக்காத வரை,  இதழுலக வல்லமையாளர்கள்(சாம்பவான்கள்) எவரும் உண்மையை உரைக்கப் போவதில்லை.  இராம் மாதிரி நாமும் ‘இலங்கா ரத்ன’ ஆக முடியாதா – என்கிற அரிப்பு இருக்கிற வரை, எந்தக் காவல் நாயாவது விருது   ஈரொட்டியை(பிசுகெட்டை)க் கையில் வைத்திருக்கிற  திருடனைப் பார்த்துக் குரைக்கப் போகிறதா என்ன?
  இளம் வயதில், திருவாளர் இராம், இரஞ்சிக் கோப்பைக்கான  மட்டையாட்டப் போட்டியில் தமிழ்நாடு அணியின்   குச்சக்காப்பர் – மட்டையாளர், மகேந்திரசிங்கு தோனி மாதிரி. அவரைப்போல் இவரும்    உகப்பூர்தி(ஃகெலிகாப்டர்)  அடியெல்லாம் அடித்தாரா என்பது எனக்குத் தெரியவில்லை. எழுபது  அகவை கடந்தபிறகு அதை  அடிக்கிறார். எரிச்சலாக இருக்கிறது நமக்கு! ஏனென்றால்,  இப்போது அவர் தமிழ்நாடு அணியில் இல்லை. அதைவிடக் கொடுமை, சிங்களக் கொலைவெறி  அணியோடு சேர்ந்துகொண்டு தமிழர்களுக்கு எதிராக  உகப்பூர்தி(ஃகெலிகாப்டர்)  அடி அடிப்பது! இதை எப்படி மன்னிப்பது?
– புகழேந்தி தங்கராசு
 தமிழக அரசியல், 28.12.2016: பக்கங்கள் 8 – 11