களப்பிரர் காலத்தில் கட்டடக்கலைமயிலை சீனி. வேங்கடசாமி
  சைவம், வைணவம், பௌத்தம், சமணம் ஆகிய நான்கு மதங்களும் இருந்த களப்பிரர் காலத்துத் தமிழகத்தில் கட்டடக்கலை வளர்ந்திருக்க வேண்டும். இந்த மதங்களின் கோயிற் கட்டடங்கள் கட்டாயம் இருந்திருக்க வேண்டும். அந்தக் கட்டடங்கள் செங்கல், சுண்ணாம்பு, மரம், இரும்பு ஆகிய பொருள்களைக் கொண்டு கட்டப் பட்டவையாகையால் அவை இக்காலத்தில் நிலைபெற்றிருக்கவில்லை. கருங்கற்களை ஒன்றின் மேல் அடுக்கிக் கட்டப்படுகிற கற்றளிக் கோயில் கட்டடங்களும் பாறைகளைக் குடைந்து அமைக்கப்படும் குகைக் கோயில்களும் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் மகேந்திரவர்மன் காலத்தில் உண்டாகவில்லை. அவை பிற்காலத்தில் முதல் மகேந்திரவர்மன் காலத்தில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் உண்டாக்கப்பட்டவை.
 (பிள்ளையார்பட்டி குகைக்கோவில் களப்பிரர் காலத்தில் உண்டாக்கப்பட்ட குகைக்கோயிலாக இருக்கலாமோ என்னும் ஐயம் தோன்றுகிறது. இதுபற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.)
  களப்பிரர் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இருந்த திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தங்களுடைய தேவாரப் பதிகங்களில் கூறுகிற கோவிற் கட்டட வகைகளான கரக்கோவில், நாழற்கோவில், கோகுடிக்கோவில், பெருங்கோவில், இளங்கோவில், மாடக்கோவில், தூங்கானை மாடம், மணிக்கோவில் முதலான கட்டட வகைகள் களப்பிரர் காலத்திலேயே தோன்றி இருக்க வேண்டும். ஏனென்றால், இந்தக் கட்டட வகையெல்லாம் திடீரென்று 7ஆம் நூற்றாண்டிலே தோன்றியிருக்க முடியாது. அக்காலத்தில் அவை செங்கற் கட்டடங்களாக இருந்தன.
  கி.பி. 7ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முதல் மாமல்லன் நரசிம்மவர்மன் என்னும் பல்லவ அரசன் காலத்தில் மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்ட பஞ்சபாண்டவ ரதங்கள் முதலான கோவில் அமைப்புகள் அவன் காலத்துக்கு முன்பு களப்பிரர் ஆட்சிக் காலத்தில் அல்லது அதற்கு முன்பு இருந்த செங்கற்கட்டடங்களின் மாதிரியைக் காட்டுகிற பாறைக்கல் அமைப்புகள். இந்தப் பாறைக் கற்கோவில்களில் பல அகநாழிகை (கருப்பக்கிருகம்) இல்லாமலே கட்டடத்தின் மேற்புறத் தோற்றம் மட்டும் பாறைக் கல்லில் அமைத்துக் கட்டப்பட்டுள்ளன. ஆகையால், மாமல்ல புரத்து இரதக் கோவில்கள், செங்கற்கட்டடங்களாக இருந்த பழைய கோவில்களின் மெய்யுருவ(தத்ரூப உருவ) அமைப்புகள் என்பதில் ஐயமில்லை.
 மயிலை சீனி. வேங்கடசாமி:
ஆய்வுக் களஞ்சியம் 3:
பண்டைத் தமிழக வரலாறு