திங்கள், 13 மார்ச், 2017

எமது அழுகுரல்கள் உங்கள் மனச்சான்றினைத் தூண்டட்டும்! – வவுனியாவில் போராட்டம்




எமது அழுகுரல்கள் உங்கள் மனச்சான்றினைத் தூண்டட்டும்!

– ஒப்பாரி வைத்து வவுனியாவில் போராட்டம் 

(ஒளிப்படங்களும் காணுரைகளும்)

 தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினால், கடந்த மாசி 12, 2048 / 24.02.2017 வெள்ளிக்கிழமையிலிருந்து வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும், ‘தீர்வு கிடைக்கும் வரை (சுழற்சிமுறையிலான) உணவு தவிர்ப்பு’ போராட்டம்  மாசி 26, 2048 / 10.03.2017 வெள்ளிக்கிழமை 15  ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
  இந்தநிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள்,  உலக மகளிர்  நாளில் (மார்ச்சு- 8, புதன்கிழமை) ஒப்பாரி வைத்துத் தமது கூட்டு மனவலிகளை ஒருமித்து வெளிப்படுத்தினர்.
  ‘பெண்கள் தாம் பெற்றுள்ள உரிமைகளுக்காகப் பெருமைப்படவும், பெற வேண்டிய உரிமைகளுக்காகப் போராட வேண்டி உறுதி ஏற்கவும் வேண்டிய  உலக மகளிர்  நாளில்கூட, தாங்கள்  கைவிடப்பட்டு, வீதிகளில் விடப்பட்டுள்ளதாகவும், பெண் சமத்துவம் – மனித உரிமைபற்றிப் பேசும் அமைப்புகளும் பெண்ணியச் செயல்பாட்டாளர்களும் ஒப்புக்காகவேனும் வாய்திறந்து இந்த மோசமான அடிப்படை உரிமை மீறல்கள் குறித்து எதுவும் பேசுவதில்லை என்றும்,
 இந்த ஒப்பாரிப் போராட்டத்தின் மூலமாவது, தமது ஒருமித்த அழுகுரல்கள்  தொடர்புடையவர்களினதும், ஆட்சி – அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களினதும் மனச்சான்றினைத் தூண்டட்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்கள் தெரிவித்தனர்.

 (படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக