நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்

விருதினைப் பெற்ற சிங்களர் !

முனைவர் செனிவிரத்னா அவர்களை சிங்களர்தம் பகுத்தறிவின் குரலாகப் போற்றுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
 சிங்களர் ஒருவர் உட்பட நான்கு பெருமக்களுக்கு பெருமைசால் உயரிய விருதுகளை வழங்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மாண்பேற்றியுள்ளது.
சா.சே.வே.செல்வநாயகம் நினைவு விருது, மாமனிதர் துணைவேந்தர் அழகையா துரைராசா நினைவு விருது, அதிபர் நெல்சன் மண்டேலா நினைவு விருது, தமிழ்த் தேசிய இளைஞர் புலமைப்பரிசில் என ஆண்டுதோறும் நான்கு விருதுகளை வழங்கி மாண்பேற்றி வருகின்றது.
அந்தவகையில் சிங்களப் பேராசிரியர் முனைவர் பிரையன் செனிவிரத்னா அவர்களுக்கு நெல்சன் மண்டேலா நினைவு விருதினையும், உயர் சட்டத்தரணி கரிகாலன் எசு. நவரத்தினம் அவர்களுக்கு  சா.சே.வே.செல்வநாயகம் (தந்தை செல்வா) விருதினையும், பேராசிரியர் சபாநாயகம் தேவநாயகம் அவர்களுக்கு மாமனிதர் துணைவேந்தர் அழகையா துரைராசா நினைவு விருதினையும், செல்வி சி.பொன் அமுதரசன் அவர்களுக்கு தமிழ்த் தேசிய இளைஞர் புலமைப்பரிசிலும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை எதிர்த்துப் போராடிவரும் வாழ்நாள் உறுதிப்பாட்டுக்காக முனைவர் பிரையன் செனிவிரத்னா அவர்களுக்கு நெல்சன் மண்டேலா நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.
‘முனைவர் செனிவிரத்னா அவர்களைச் சிங்களர்தம் பகுத்தறிவின் குரலாகப் போற்றுகிறோம்’ என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் முனைவர் பிரையன் செனிவிரத்னா( Dr Brian Senewiratne):
தமிழினத்துக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகளை எதிர்த்துத் தீரத்துடனும் பலநேரம் தனியொருவராகவும் முன்வந்து இயக்கம் நடத்தியுள்ளார். தம் சொந்தச் சிங்கள உடன்பிறப்புகளின் நல்வாழ்வில் எவ்வளவு அக்கறை கொண்டவரோ அதே அளவுக்குத் தமிழர்களின் நல்வாழ்விலும் அக்கறை கொண்டவர் முனைவர் செனிவிரத்னா.
சிறிலங்காவில் அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களின் உரிமைகளை ஒடுக்குவதையும், தமிழர்களின் சனநாயக அறப் போராட்டங்கள் அரசாங்க ஆதரவு பெற்ற இனவதைகளாலும் இராணுவப் படைகளாலும் அடக்கப்படுவதையும் கண்ட முனைவர் செனிவிரத்னா தமிழர்தம் உரிமைகளைக் காப்பதே வாழ்வில் தம் கடன் எனக் கொண்டார். அவர்கள் தாங்கள் பிறந்த தாய்நாட்டில் நிகர்மை, கண்ணியம், இடர்காப்புடனும், பாகுபாடின்றியும் வாழும் உரிமைக்காகப் போராடிச், சிங்கள இனத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதே உரிமைகள், வாய்ப்பு வசதிகளை அவர்களும் துய்க்க வழி செய்வதைக் குறிக்கோளாக ஏற்றார்.
1972ஆம் ஆண்டு செனிவிரத்னா பெரதேனியா பலகலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராக இருந்த நேரத்தில் அவருக்கு உறவுக்காரரான சிறிமா பண்டாரநாயக்காவின் தலைமையர் பதவிக் காலத்தில் சிங்களக் காடையர்கள் தமிழர்களை அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து வேட்டையாடித் துரத்திய போது அந்தத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தவர் செனிவிரத்னா. அவரே நகைச்சுவையாகக் கூறியது போல் ‘இரவுச் சுற்று’ சென்று (மருத்துவ மனையில் தொகுதி தொகுதியாகப் பார்வையிடுவாரே, அப்படி) கண்டித் தெருக்களில் அலைந்து, செத்துக் கொண்டிருந்த தமிழர்களை அள்ளி வந்து மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளித்தார்; உயிர்பிழைக்க முடியாதவர்களுக்குக் கண்ணியமான சாவு கிடைக்கச் செய்தார்.
இவரது தன்னளிப்பை அறிந்தேற்குமுகத்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் மேலவை உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
கரிகாலன் எசு. நவரத்தினம் :
கரிகாலன் 1958ஆம் ஆண்டு தமிழர் போராட்டத்தில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கிய போது உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்தார். அவ்வாண்டில் ‘தனிச்சிங்களம் – சிறி’ எதிர்ப்புப் போராட்டத்தில் சா.சே.வே.செல்வநாயகம் (தந்தை செல்வா), வன்னியசிங்கம் போன்ற தமிழர் தலைவர்களோடு தளைப்படுத்தப்பட்டார். தமிழர்கள் அரசியல் காரணங்களுக்காகத் தளைப்படுத்தப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்ட முதல் போராட்டம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
திரு கரிகாலன் தமிழர் போராட்டத்தில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட்டுத், தமிழர்களின் பெரும் அறப் போரட்டங்களில் முன்னணிப் பங்கு வகித்தார். இவற்றுள் ஒன்றாகிய 1961 அறப் போராட்டத்தில் தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் அமைதிவழிப்பட்ட தமிழர் உரிமைக் கிளர்ச்சிகளால் மூன்று மாதக் காலம் அடியோடு முடங்கிப் போயிற்று. சிறிலங்கா அரசாங்கம் நெருக்கடிநிலை அறிவித்து, கரிகாலனையும், எஸ்.ஜே,வி. செல்வநாயகம், வன்னியசிங்கம் போன்ற தலைவர்களையும் தளைப்படுத்தியது. அவர்களனைவரும் தெற்கில் பனகொடா எனப்படும் இராணுவ முகாமில் சிறைவைக்கப்பட்டனர். இருபது வயதுக் கரிகாலன்தான் சிறைப்பட்டவர்களிலேயே இளையவர். ஆறு மாதக் காலச் சிறைக் காவலுக்குப் பின் மற்றத் தலைவர்களோடு அவரும் விடுதலை செய்யப்பட்டார்.
கரிகாலன் சட்டத் தரணியாக உறுதியெடுத்துப் பொறுப்பேற்ற போது அவரைப் பாராட்டி வாழ்த்த  சா. சே. வே. செல்வநாயகம் அவர்களே நேரில் உச்ச நீதிமன்றம் சென்றதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர் சட்டத் தாரணி ஆன பிறகு செல்வநாயகம்  முதலான தமிழர் தலைவர்களோடு நெருக்கமாக இருந்து செயல்பட்டார். தமிழர்தம் கோரிக்கைகள் குறித்தான  முதன்மை ஆவணங்களும் உடன்படிக்கைகளும் விவாதித்து வரையும் பணியில் அவரே நேரில் சா. சே. வே. செல்வநாயகத்துடன் நேரம் செலவிட்டார்.
பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் இளைஞர்கள் ஈடுபட்ட போது, அவர் அம்மாணவர்களின் முக்கிய வழக்குரைஞர்களில் ஒருவராகி, தமக்கு வரக் கூடிய  பேரிடர்பற்றிக் கவலைப்படாமல் அவர்களுக்கு உதவினார். நீதிமன்றங்களில் பொன். சிவகுமாரன், தங்கத்துரை, குட்டிமணி  முதலான தமிழ் இளைஞர்களுக்காக வழக்குரைத்தார். தங்கத்துரை தமக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட போது, கரிகாலனைப் போற்றித் தன் மகனுக்குக் கரிகாலன் என்றே பெயரிட்டார். தங்கத்துரையும் குட்டிமணியும் மேலும் 52 தமிழ் அரசியல் கைதிகளும் 1983 தமிழர் இனவதையின் போது வெலிக்கடைச் சிறைக்குள் சிங்களச் சிறைக் காவலர்களின் துணையோடு சிங்களக் கைதிகளால் கொல்லப்பட்டார்கள் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
நாதம் ஊடகசேவை
TGTE
+1-212- 290- 2925